கல்வி 6.0
ஏன் இந்த கல்விக் கழகம்?
சுருக்கமாக விவரித்து விடுகிறோம். அது கல்வியைப் பற்றிய எங்கள் புரிதலோடு துவங்குகிறது.
கல்வி என்றால் என்ன?
என்னை அறிந்துக் கொள்வது. என்னைச் சுற்றியுள்ள உலகத்தை (அண்டத்தை) அறிந்துக் கொள்வது. எனக்கும் உலகத்திற்குமான உறவை அறிந்துக் கொள்வது. இதுவே கல்வி.

என்னை அறிந்துக் கொள்வது எப்படி?
எனக்கென்று ஓர் உடல் (Body) இருக்கிறது. சிந்திக்கும் மனம் (Intellectual mind) இருக்கிறது. உணரும் உள்ளம் (Emotional mind) இருக்கிறது. நான் ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் (Context) வாழ்கிறேன். இவைகளைத் தாண்டி ஜம்புலன்களால் அறியமுடியாத, மனத்தால் புரிய முடியாத, உள்ளத்தால் உணரமுடியாத, இடத்தையும் காலத்தையும் தாண்டிய சக்தி (Universal energy - Intuition) இருக்கிறது.
ஆக, என் உடல், என் மனம், என் உள்ளம், என் சூழல் (இடம், காலம்), என் சக்தியை அறிவதே என்னை அறிவது எனலாம்.
உலகத்தை அறிந்துக் கொள்வது எப்படி?
என் ஜம்புலன்களால் பார்க்க முடிகிற, கேட்க முடிகிற, நுகர முடிகிற, சுவைக்க முடிகிற, தொட முடிகிற ஸ்தூல உலகம் (Physical world) இருக்கிறது. அதோடு, இதுவரை கற்றுணர்ந்த, ஆறாவது அறிவு கொண்டு அறிந்துக் கொள்கிற, அறிவுலகம் ( Intellectual world) இருக்கிறது. இதுவரை மனிதகுலம், உணர்வுகளால் மேலிட்டு, கற்பனை செய்து படைத்துள்ள உணர்வுலகம் (Emotional world) இருக்கிறது. நான் வாழுகிற காலத்திற்கும் முந்தைய, பிந்தைய காலங்கள் (Time and Space - Past to Future) இருக்கின்றன. நான் அனுபவிக்காத இடம் தவிர வேறு இடங்கள் இருக்கின்றன. ஆறு அறிவுகளுக்கும் அப்பாற்பட்ட உலகம் (Spiritual world) இருக்கிறது.
ஆக, என்னைச் சுற்றியுள்ள ஸ்தூல உலகம், அறிவு உலகம், உணர்வு உலகம், சூழல், புலப்படாத சக்தியை அறிவதே உலகத்தை அறிவது எனலாம்.



எனக்கும் உலகத்திற்குமான உறவை அறிந்துக் கொள்வது எப்படி?
என் உடல் கொண்டு இந்த ஸ்தூல உலகத்தோடு (Action) உறவு கொள்கிறேன். அதற்கு ஜம்புலன் உறவு (experience) எனலாம். என் மனம் கொண்டு அறிவு உலகத்தோடு உறவு ( Reflection) கொள்கிறேன். அதற்கு சிந்தனை உறவு (Conceptualisation process) எனலாம். என் உணர்வு கொண்டு உணர்வு உலகத்தோடு உறவு (Imagination) கொள்கிறேன். அதற்கு உணர்வு உறவு (Visualisation process) எனலாம். என் சூழலில், சுற்றுச் சூழலோடு உறவு (living) கொள்கிறேன். அதற்கு சுற்றுச்சூழல் உறவு (Contexualisation process) எனலாம். என் சக்தி கொண்டு புற சக்தியோடு உறவு கொள்கிறேன் (Instinct). அதற்கு ஆன்ம உறவு (Spiritual process) எனலாம்.
ஆக, ஜம்புலன் உறவு, சிந்தனை உறவு, உணர்வு உறவு, சுற்றுச்சூழல் உறவு, ஆன்ம உறவு ஆகியைவைகளை அறிவதே எனக்கும் உலகத்திற்குமான உறவை அறிந்துக்கொள்வது எனலாம்.
அதனால் கல்வி என்பது என்னையும், உலகத்தையும், இடையில் உள்ள உறவையும் பற்றிய உண்மையைக் கண்டு தெளிவடைவது.
இன்றையக் கல்வி நிலை எப்படி இருக்கிறது?
என் உடல் மற்றும் ஸ்தூல உலகத்தைப் பற்றி நிறையத் தகவல்களைச் (Information) சேகரித்துக் கற்றுத் தருகிறது. இந்த உலகத்தோடு உறவாட உயர்ந்த திறமைகளை (Skills) வளர்த்துக் கொள்ள உதவுகிறது. என் அறிவு விரிவடைய வெவ்வேறு துறைச் சார்ந்த பாடங்களைச் சொல்லித் தருகிறது. என் கற்பனைத் திறனை வளர்க்க, படைப்புகளால் வெளிப்படுத்த வாய்ப்புகளை (Innovative and creative chances) கொடுக்கிறது. நல்லொழுக்கச் சிந்தனைகளை (moral values) என் மனதில் விதைக்கிறது. ஆன்மீக அனுபவத்தைக் கொடுக்க முயற்சிக்கிறது. பல திட்டங்கள் (Projects) மூலம் வாழ்க்கையை கற்றுக்கொள்ள முனைகிறது.
மனிதகுலம் கல்வி அறிவையும், திறனையும், மதிப்பீடுகளையும் கூராக்கிக்கொண்டே வந்திருக்கிறது. சொல்லிக் கொடுக்கும் முறையையும் பங்கெடுப்பு முறையாக, மகிழ்ச்சியோடு கற்கும் முறையாக, புதுமையான கற்கும் முறையாக மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது.
இதற்கு நமது முதுகே நாமே ஒரு முறை தட்டிக் கொள்ளலாம்.
தட்டியாகிவிட்டதா? சரி. இன்னும் தொடர்ந்து படித்துவிட்டு, நாம் தட்டிக் கொண்டது சரிதானா எனப் பார்ப்போம். அதற்கு இன்றைய உலக நிலை எப்படி இருக்கிறது எனப் பார்க்க வேண்டும்.


Source: https://www.businessinsider.com.au perfect for long blocks of text.
இன்றைய உலக நிலை எப்படி இருக்கிறது?
உலகப் பேரழிவு 6.0
உலக பேரழிவு 6.0 (Mass extinction 6.0) என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். டைனசோர் போன்ற மிருகங்கள், உலகில் நடமாடிக் கொண்டிருந்தன. அவைகள் இன்று அடியோடு காணாமல் போய்விட்டன. இதைப்போன்ற உலகில் உள்ள முக்கால்வாசி உயிரனங்கள் அழிவதையே உலகப் பேரழிவு என்கிறோம். அதற்கு வெளியிலிருந்து வந்த விண்கற்களோ அல்லது பூமியில் நடந்த எரிமலையோ காரணமாக இருந்திருக்கின்றன.
443 மில்லியன் வருடங்களுக்கு முன்பு நடந்த முதல் பேரழிவைத் தொடர்ந்து, தற்போது ஆறாவது பேரழிவு நடந்துக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணகர்த்தாக்களாக இருப்பது யார் தெரியுமா? நெஞ்சு நிமிர்த்தி, திமிரோடு இயற்கை வளங்களை கபளீகரம் செய்து கொண்டிருக்கிற மனிதர்கள் தான் இதற்கு காரணமாக இருக்கிறார்கள். இரசாயன மாசுபாடு (chemeical pollution), புவி வெப்பமடைதல் (climate change and greenhouse effect) , உயிரனங்களை தேவைக்கதிகமாகக் கொல்வது, என பல நவீன வாழ்க்கைக்கான காரணங்கள் அதன் பின்னே இருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இதுவரை மனிதகுலம் தேடிவைத்த கல்வியறிவு உலகப்பேரழிவிற்காகத்தான் பயன்படுத்தப்படுகிறதா? என்கிற கேள்வி எழாமல் இல்லை.
இந்த நவீன வாழ்க்கைக்கான ஏற்பாடுகள் எப்படி நடக்கின்றன? அதற்கு தொழிற்புரட்சி 4.0 பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.

தொழிற்புரட்சி 4.0
தொழிற்புரட்சி 4.0 (Industrial revolution 4.0) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். வணிகம் உலகமயமானபிறகு (globalisation), இணையத்தைப் (Internet of things) பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) கொண்டு, இயந்திரங்கள் சுயமாக கற்று செயல்படுவதன் (machine learning) மூலமாக ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகள் மாத்திரம் அசுர லாபம் பெற வழி வகை செய்யும், தொழில் மற்றும் வணிக முறை செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான பணியாளர்களை உருவாக்க இருபத்தியோராம் நூற்றாண்டுத் திறன்கள் (21st century skills) தேவையாக இருக்கின்றன.
இதுவரை மனிதகுலம் தேடிவைத்த திறனறிவு ஒரு சிலர் லாபம் சம்பாரிக்க, உலக வளத்தை சுரண்டி பேரழிவிற்கு கொண்டுச் செல்லத்தான் பயன்படுகிறதா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
சுற்றுச்சூழலிலும், வணிகத்திலும் நடக்கிற இதே நிலை கலை கலாச்சாரத்திலும், அரசியலிலும் நடக்கிறது. உலகப்போர் 3.0 பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
உலகப்போர் 3.0
உலக வளங்களின் மேலும், மக்கள் மனங்களின் மேலும் மேலாதிக்கம் செலுத்த பல உலக அமைப்புகள் துடியாய் துடிக்கின்றன. மதங்களின் பெயரால், தேசியங்களின் பெயரால், அமைப்புகளை உருவாக்கி ஊடகங்களை தன் வயப்படுத்தி, துர்கருத்துக்களை போதித்து, உலக மேலாண்மை செய்ய செயல்படுகின்றன. எளிய நாடுகளை கடன் என்கிற பெயராலும் தன் வலைக்குள் போட்டு அந்த மேலாண்மைக்கு வழி கோலுகின்றன. பன்முகம் கொண்ட மொழி, இலக்கியம், கலை, பண்பாடுகளை இருட்டடிப்பு செய்து ஒரு சில கலாச்சாரத்தை மட்டும் தூக்கிப்பிடிக்க முயலுகின்றன. துப்பாக்கி குண்டுகளால் செய்யும் போரைவிட வலிமையாய், மௌனமாய் கலாச்சாரப் போர் நடந்துக்கொண்டிருக்கிறது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை மனிதகுலம் தேடிவைத்த விழுமிய மாண்புகள், ஒரு சில கலாச்சார குழுக்களும், அரசியல் குழுக்களும் பெரும்பான்மையோரை மேலாதிக்கம் செய்யத்தான் பயன்படுகிறதா? என்கிற கேள்வி எழுகிறதா இல்லையா?
கல்வியும் இன்றைய உலக நிலையும்
ஆக, இதுவரை கல்வி மூலம், மனிதகுலம் தேடிவைத்த அறிவும் (knowledge), திறனும் (skill), பண்பாட்டு விழுமியங்களும் (values) உலக அழிவிற்கும், ஒரு சிலர் லாபத்திற்கும், அவர்களுடைய மேலாண்மைக்கும் தான் பயன்படுகிறது. அப்படியானால் அப்படிப்பட்ட கல்வி தனிப்பட்ட மனிதருக்கும் மனிதகுலத்திற்கும் உலக உயிரனங்களுக்கும் ஊறு விளைவிக்க கூடியதாக இருக்கிறது என்று முடிவு செய்யலாம்.
அதனால் கல்வியில் ஒரு புரட்சி வேண்டும். அது என்னவிதமான புரட்சி? கல்விப்புரட்சி 6.0

கல்வி புரட்சி 6.0
கல்வி 6.0 என நாம் முன் வைப்பது, கல்வி உலகத்தில் ஒரு புரட்சி. அதைப் புரிந்துக் கொள்ள, உலகளவில் கல்வி 0.0 முதல் கல்வி 5.0 வரை என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான், அவைகளிலிருந்து விலகி, வித்தியாசமாக, நாம் கல்வி 6.0 என்பதை ஏன் முன்வைக்கிறோம் எனப் புரிந்துக் கொள்ள முடியும்.
கல்வி 0.0 முற்கால கல்வி
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில், காலனியாதிக்கத்தில் துவங்கப்பட்ட மெக்காலே கல்வி முறைக்கு முன்பு, சமூக கட்டமைப்பைக் கட்டிக் காக்க, உயர் குலத்தோர் கற்கும் கல்வி முறை ஒன்று இருந்தது. அதற்கும் முன்பு மன்றங்கள், சங்கங்கள் அமைத்து கற்கும் கல்வி முறையும் இருந்தது. திண்ணைகளிலும், குருகுலங்களிலும், மணல், பனைஓலைகளைக் கொண்டு கல்வி கற்ற காலம். அப்படி முற்காலத்திய கல்வி முறைகளை கல்வி 0.0 என்று வகைப்படுத்துவோம்.
கல்வி 1.0 ஆசிரியர் மையக் கல்வி
காலனியாதிக்க காலத்தில், கல்வி, ஆசிரியர் மையக் கல்வியாக இருந்த நேரம். அரசியல் மேலாண்மையை கட்டிக் காக்க, எல்லோருக்குமான பாடத்திட்டம் தயாரிக்கப்படும். அதற்கான ஆசிரியர்கள் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள். மாணவர்கள் பாடத்தைக் கேட்பார்கள். தேர்வு வைக்கப்படும். ஞாபகசக்தி அதிகம் உள்ளவர்கள், தேர்வில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். அப்படித் தேர்வானவர்களை தகுந்த வேலையில் அமர்த்துவார்கள். இந்த பாணி, இரண்டாம் உலகப்போருக்குப் பின்பும் பல நாடுகளில் இருந்தது. அந்தந்த தேசிய அரசுகளுக்கு அது தேவையாக இருந்தது. காகிதமும், பேனை மையும், கரும்பலகையும் அன்றைய கல்வித் தொழிற்நுட்பங்கள்.
கல்வி 2.0 ஆசிரியர் - மாணவர் மையக் கல்வி
ஆசிரியர்கள் கற்றலை இலகுவாக்குபவர்கள் என்கிற புதிய பதவிக்கு வந்த காலம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தகவல் தொடர்பு அதிகம் உண்டாகத் துவங்கிய காலம். அது மட்டுமல்ல மாணவர்கள் இடையேயும் உறவு மேம்படத் துவங்கிய காலம். பாடத்திட்டத்திற்கும் கற்போருக்குமான உறவும் மேம்படத் துவங்கிய காலம். பாடப்புத்தகங்களோடு செய்முறைப் பயிற்சிகளும் சேர்க்கப்பட்டன. இதிலும் தேர்வு முறை இருந்தது. ஞாபகச் சக்திக்கானத் தேவை இருந்தது. கற்றல் இனிமையான நிகழ்வாக இருக்கவேண்டும் என்று பேசத்துவங்கிய காலம். சொல்லிக் கொடுத்தல் அல்ல, கற்றலே முக்கியம் என்று யோசிக்கத் துவங்கிய காலம்.
கல்வி 3.0 மாணவர் மையக் கல்வியும் கணிணி தொழிற்நுட்பமும்
ஆசிரியர்கள் முழுமையாக கற்றலை இலகுவாக்குபவர்களாக மாறிய காலம். ஆசிரியர்களோ மாணவர்களோ மையம் அல்ல. எளிதாக, இலவசமாகக் கிடைக்கும் பாடப்பொருளும் கணிணியும் மையமாகத் துவங்கிய காலம். தகவல்களோடு திறன்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கிய காலம். திறனாய்வு சிந்தனை(Critical Thinking), புதுமை (Innovation), கற்பனைத்திறன் (Imagination), படைப்பாற்றல் திறன் (Creativity), தகவல்தொடர்புத் திறன் (Communication), மற்றவர்களோடு சேர்ந்து பணி செய்யும் திறன் (Collaboration) பற்றியெல்லாம் பேசப்பட்ட காலம். மாணவர்களே தன்முனைப்போடு தேடி கற்க, சூழல் அமைந்த காலம். வகுப்பறைகளைத் தாண்டி கற்கும் சூழலும் அமைந்த காலம். எங்கு பார்த்தாலும் கணிணி மையமாக மாற சூழல் அமைந்த காலம்.
கல்வி 4.0 இணைய மையக் கல்வி
அசிரியர், வகுப்பறை, பாடத்திட்டம், பள்ளி ஆகியவைகளின் இடத்தை இணையம் எடுத்துக்கொள்ள துவங்கியக் காலம். நேருக்கு நேரான சந்திப்பை விட, இணைய வழி உறவு அதிகமான காலம். கூட்டாக படைப்பது (Creating Collaboratively), புதுமை காணுவது (Innovation ) என்பவை மையமான காலம். நான்கு சுவர் வகுப்பறைகளுக்கான முக்கியத்துவம் ஒழிந்து, அகில உலகமே வகுப்பறையாக மாறிய காலம். தொழிற்புரட்சி 4.0 வுக்கு துணையாக தகவல்களையும், திறன்களையும் கற்க ஏதுவான காலம். பாடக் கருப்பொருட்கள் நீக்கமற எல்லா இடத்திலும் கொட்டிக்கிடக்கும் காலம். தன் முனைப்பு கற்றல் மாத்திரம் அல்ல, தனிப்பட்ட நபர்களின் திறன்களை உருவாக்குகிற பாடக் கருப்பொருட்கள் நிறைந்துள்ள காலம். கூட்டாகச் சேர்ந்து கற்பதோடு, தனிப்பட்டவரின் பயனுக்கான கற்றலாகவும் மாறிவிட்டது. ஆசிரியரின் பங்கு தான் என்ன? என சவால் விடும் காலம். மனிதர்களை விட இயந்திரங்களுக்கு மவசு வந்த காலம்.
கல்வி 5.0 மனிதரை மையப்படுத்திய கல்வி
இந்த உலகம் அநியாயத்திற்கு இயந்திரங்களால் ஆளப்படுகிறது என்றும் அது போகப்போக மோசமாகப்போகும் சூழ்நிலை தான் இருக்கிறது என்றும், அது மிக மோசமான விளைவுகளை மட்டுமே உண்டாக்கும் என்றும் அதனால் மனிதர்களை மையப்படுத்திய கல்வி தேவை என்றும் ஒரு சிலர் பேசத்துவங்கியிருக்கிறார்கள். இயந்திரமும் தொழிற்நுட்பமும் வெறும் கல்விக்கான உபகரணங்களாகத்தான் இருக்கவேண்டுமே ஒழிய அவைகளே கல்வியை மேலாண்மை செய்ய விடக்கூடாது என்று வாதிக்கிறார்கள். கோரணி நச்சு உலகத்தை தொற்றியதும் கல்வி உலகம் மாறத்தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ரோபோட்கள் (Robotics), தானியங்கல் (Automation), பெரும் தரவு (Big Data) போன்ற தொழிற்நுட்ப வளர்ச்சிகள் நவீன கல்வியை மாற்றி வருகிறது. மனித மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். சந்தைக்கும் கம்பெனிகளுக்குமான தேவையை மாத்திரமல்ல கற்போர் மற்றும் சமூகத்தின் தேவைக்குமானதாக கல்வி இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசத் துவங்கியிருக்கிறார்கள். மனிதரை மையப்படுத்திய கல்வி 5.0 குறித்த நடைமுறைகள் பெருமளவில் துவங்கவில்லையென்றாலும், இது ஒரு நல்ல எண்ணத்தில் தான் பேசப்படுகிறது. ஆனால் நாம் கல்வி 6.0 என்கிற புதிய கல்விப் புரட்சியை முன்வைக்கிறோம்

கல்வி 6.0 இயற்கையை (பன்மயத்தையும் பண்பாட்டையும்) மையப்படுத்திய கல்வி
கற்றலில் ஆசிரியர் மையம் அல்ல. மாணவர் மையம் அல்ல. பாடப்புத்தகங்கள் மையம் அல்ல. கணிணி, இணையம், எண்ணியல் கருவிகள் (digital gadgets) மையம் அல்ல. மனிதர்கள் மையம் அல்ல. இயற்கையே மையம். பல்லுயிர் பன்மயமே மையம். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும், நீடித்து நிலைத்து வாழ கற்பதே கல்வி. பன்மய பண்பாடுகள் இருக்கின்றன. கல்வி அவரவர் பண்பாட்டு வேர்களில் முளையிட வேண்டும். பல்லுயிர் ஓம்புதலும் பண்பாட்டை பேணுதலும் கல்வியின் ஆதாரங்களாக இருக்கவேண்டும். அதற்கான அறிவைப்பெருக்க வேண்டும். அதற்கான திறன்களை வளர்க்க வேண்டும். அதற்கான மதிப்பீடுகளைப் பேண வேண்டும்.
அறிவு உயிரினங்களை அழிப்பதாக இருக்கக்கூடாது. உயிரினங்களைக் காப்பதாக இருக்க வேண்டும். திறன்கள் ஒரு சாராருக்கு பலனளிப்பதாக மட்டும் இருக்கக்கூடாது. எல்லோருக்கும் சமமாக, நியாயமாக பலன் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். பண்புகள், ஒரு குழு, மற்றவர்கள் மேல் மேலாதிக்கம் செலுத்துவதாக இருக்கக் கூடாது. எல்லோரும் இன்புற்று புரிதலோடும் அன்போடும் ஒழுக பயன்பட வேண்டும்.
இந்த கல்வி 6.0 புரட்சி சாத்தியமா?
சாத்தியமா, சாத்தியம் இல்லையா என யோசிப்பதைவிட, தேவையா, தேவையில்லையா என யோசிக்க வேண்டும்.
உலக உயிரினங்களும், சுற்றுச் சூழலும் அழியாமல் இருக்க வேண்டுமென்றால், எல்லோரும் புரிதலோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றால் இந்தப் புரட்சியை செய்தே ஆக வேண்டும். அதற்கு இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சி பெரிதும் துணை நிற்கும். தேவை ஒன்றே ஒன்று தான். இது ஏதோ ஒரு மாற்று கல்வி அல்ல. இது ஒரு அறம் சார்ந்த போர் என உணர வேண்டும். அதற்கு தயாராக வேண்டும்.
உயிர்மெய் கண்ணோட்டம்
கல்வி 6.0 புரட்சியைச் செய்ய சரியான கண்ணோட்டம் தேவை. சமூக பயன்பாட்டிற்கான சீர்மிகு திறன்களும், பன்முக பண்பாட்டு விழுமியமும், நிலைத்த நீடீத்த தன்மையில் சூழலோடு உறவும் கொண்ட பார்வை இந்தக் கல்வி புரட்சியாளர்களுக்கு வேண்டும். அந்தப் பார்வைக்கு ‘உயிர்மெய் பார்வை’ என்று பெயரிட்டிருக்கிறோம். (அதற்கான காரணம் இன்னொரு கட்டுரையில் விளக்கப்படும்.)
இதை ஒருவர் மட்டுமே செய்யமுடியுமா?
ஒருவர் எங்கு இருக்கிறாரோ, அங்கேயே, என்ன செய்கிறாரோ அதிலேயே, என்ன முடிகிறதோ, அதையே செய்ய, உயிர்மெய் பார்வை கொண்டு பயணிப்பதே போதுமானது.
மறந்துவிடாதீர்கள். ஒரு குண்டான் பாலில் ஒரு சொட்டு விஷம் விழுந்து கெடுத்து விடும். அந்த எதிர்மறை எண்ணம் வேண்டாம். இப்படிப் பாருங்கள். ஒரு குண்டான் பாலில் கொஞ்சம் உறை மோர், முழு பாலையும் தயிராக்கிவிடும். ஆகவே, நேர்மறை எண்ணத்தோடு செயல்பட்டால் மலையளவு செயல் கூட கடுகளவாகிவிடும்.
நாம் இணைந்தால் முடியாதா என்ன?
அதற்கான ஒரு திட்டமே இந்த John Britto Academy.