காட்சி - 1
இடம்: இளங்கோவன் வீடு
காலம்: காலை 8:00 மணி
பாத்திரங்கள்: இளங்கோவன், இளங்கோவன் அம்மா, இளங்கோவன் அண்ணன் தென்னவன்.
( இளங்கோவன் அம்மா அடுக்களையிலிருந்து இரண்டு கிண்ணங்களில் கேசரி எடுத்துக் கொண்டு சாப்பிடும் அறைக்கு வருகிறார்.)
அம்மா: இளங்கோவா! தென்னவா!! வாங்க. வாங்க.
இளங்கோவன்: (வந்துகொண்டே) என்னம்மா?
அம்மா: கேசரி செஞ்சிருக்கேன்ப்பா. எங்க அண்ணன்?
இளங்கோவன்: அண்ணா! அண்ணா!… சீக்கிரம் வா. அம்மா கேசரி செஞ்சிருக்காங்க.
தென்னவன்: (ஒடி வந்து கொண்டே) இதோ வந்துட்டேன்.
(அம்மா இரண்டு கேசரி கிண்ணங்களையும் மேசை மீது வைக்கிறார்.)
இளங்கோவன்: அட! இந்தக் கிண்ணத்தில் உள்ள கேசரியில மேல முந்திரி பருப்பு இருக்கு. அந்த கிண்ணத்துல உள்ள கேசரியில மேல முந்திரி பருப்பு இல்ல. நான் மொதோ கிண்ணத்தையே எடுத்துக்கறேன்.
(இளங்கோவன் மேலே முந்திரி பருப்பு உள்ள கிண்ணத்தை எடுத்துக் கொள்கிறான். தென்னவன் முந்திரி பருப்பு இல்லாத கிண்ணத்தை எடுத்து சாப்பிடுகிறான்.)
தென்னவன்: இளங்கோவா! இந்தக் கிண்ணத்தில் மேல தான் முந்திரி பருப்பு இல்ல. ஆனா பாரு. உள்ள எவ்வளவு முந்திரி பருப்பு இருக்கு. ஐயா! அடிச்சது லக்கு. ஆமா? ஒன் கிண்ணத்துல மேல முந்திரி பருப்பு இருந்துச்சே. உள்ள இருக்கா?
இளங்கோவன்: (தேடிக்கொண்டே) அண்ணா! உள்ள முந்திரி பருப்பே இல்ல. மேல ரெண்டு முந்திரி பருப்பு இருந்ததப் பாத்து ஏமாந்துட்டேன்.
(அம்மா சிரிக்கிறார்.)
*****
காட்சி - 2
இடம்: இளங்கோவன் வீடு
காலம்: காலை 8:00 மணி
பாத்திரங்கள்: இளங்கோவன், இளங்கோவன் அம்மா, இளங்கோவன் அண்ணன் தென்னவன்.
காட்சி 1 நடந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. மறுபடியும் இளங்கோவன் அம்மா கேசரி செய்துக் கொண்டு பிள்ளைகளை அழைக்கிறார்.
அம்மா: இளங்கோவா! தென்னவா! வாங்க. கேசரி செஞ்சிருக்கேன். வந்து சாப்பிடுங்க. (இரண்டு கிண்ணங்களை மேசையின் மேல் வைக்கிறார். இளங்கோவனும் தென்னவனும் வருகிறார்கள். போன வாரம் போலவே ஒரு கிண்ணத்தில் உள்ள கேசரி மேல் முந்திரி பருப்பு இருக்கிறது. இன்னொன்றில் இல்லை.)
இளங்கோவன்: (மேலே முந்திரி பருப்பு இல்லாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டே) அண்ணா! போன தடவை மாதிரி ஏமாற மாட்டேன். நீ மேலே முந்திரி பருப்பு இருக்கற கிண்ணத்தை எடுத்துக்கோ. (தென்னவன் இரண்டாவது கிண்ணத்தை எடுத்துக்கொள்கிறான்.)
தென்னவன்: (சாப்பிட்டுக் கொண்டே) இளங்கோவா! மேல முந்திரி பருப்பு இருக்கு. அட! என்ன ஆச்சரியம்!! உள்ளயும் நிறைய பருப்பு இருக்கு. உன் கிண்ணத்துல மேல முந்திரி பருப்பு இல்ல. உள்ளயாவது இருக்கா?
இளங்கோவன்: (தேடிக் கொண்டே) இல்லயே! மேலயும் இல்ல. உள்ளயும் இல்ல. போன தடவை உன் கிண்ணத்துல நிறைய இருந்தது நினைச்சு இதை எடுத்தேன். மறுபடியும் ஏமாந்துட்டேன்.
(அம்மா சிரிக்கிறார்)
*****
காட்சி - 3
இடம்: இளங்கோவன் வீடு
காலம்: காலை 8:00 மணி
பாத்திரங்கள்: இளங்கோவன், இளங்கோவன் அம்மா, இளங்கோவன் அண்ணன் தென்னவன்.
காட்சி 2 நடந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. மறுபடியும் இளங்கோவன் அம்மா கேசரி செய்துக் கொண்டு பிள்ளைகளை அழைக்கிறார்.
அம்மா: இளங்கோவா! தென்னவா! வாங்க. கேசரி செஞ்சிருக்கேன். வந்து சாப்பிடுங்க. (இரண்டு கிண்ணங்களை மேசையின் மேல் வைக்கிறார். இளங்கோவனும் தென்னவனும் வருகிறார்கள். இப்பொழுது இரண்டு கிண்ணங்களிலும் மேலை முந்திரி பருப்பு இல்லை.)
இளங்கோவன்: அண்ணா! பாருங்க. இப்போ இரண்டு கிண்ணத்திலும் மேல முந்திரி பருப்பு இல்ல. எதை எடுக்கறது?
தென்னவன்: மொதல்ல மேல முந்திரி பருப்பு இருக்கறத எடுத்த. ஆனா உள்ள இல்ல. அப்பறம் மேல முந்திரி பருப்பு இல்லாத கிண்ணத்த எடுத்த. பாத்தா, உள்ளயும் இல்ல. இப்ப எதை எடுக்கப் போற?
இளங்கோவன்: அதாண்ணே புரியல. (அம்மாவைப் பார்த்து) அம்மா! உங்களுக்குத்தான் தெரியும். நீங்களே எடுத்துக் குடுங்க.
(அம்மா கிண்ணங்களைப் பிரித்துக் கொடுக்கிறார். இருவரும் கேசரியின் உள்ளே கிளறிப் பார்க்கிறார்கள்.)
இளங்கோவன்: அண்ணா! என் கிண்ணத்துல உள்ளற முந்திரி பருப்பு இல்ல. உனக்கு?
தென்னவன்: தம்பி! என் கிண்ணத்துலயும் உள்ளற முந்திரி பருப்பு இல்லப்பா.
அம்மா: (கேசரி செய்த சட்டியைக் காண்பித்து) இதோ! எல்லா முந்திரி பருப்பும் இந்தச் சட்டியில் இருக்கு.
இளங்கோவன்: அம்மா! ஏமாத்திட்டீங்க. ஏம்மா இப்படி ஏமாத்தினிங்க?
அம்மா: ஏமாத்தனும்னு நினைக்கலப்பா. வாழ்க்கையில எப்படி முடிவெடுக்கறதுன்னு உங்களுக்கு கத்துக் குடுக்க ஆசைப்பட்டேன். மொதோ வாரம் என்ன பண்ணுன?
இளங்கோவன்: மேல முந்திரி பருப்பு இருக்கிற கிண்ணத்தை எடுத்தேன். ஆனா உள்ளாற ஒண்ணுமே இல்ல. ஏமாந்துட்டேன்.
அம்மா: ம்! மேலோட்டமா பாக்கறத வச்ச, ஆழமா யோசிக்காம முடிவெடுத்தா அப்படித்தான். ஏமாந்துடுவோம். சரி. ரெண்டாவது வாரம் என்ன பண்ணுன?
இளங்கோவன்: போன வாரம் தான் அப்படி ஆச்சேன்னு, மேல முந்திரி பருப்பு இல்லாத கிண்ணத்தை எடுத்தேன். அப்பயும் உள்ளாற முந்திரி பருப்பு இல்ல. ஏமாந்துட்டேன்.
அம்மா: ஆமா! பழைய அனுபவத்தை வச்சி யோசிக்காம முடிவெடுத்தா அப்படித்தான். ஏமாந்துடுவோம். இந்த வாரம் என்ன பண்ணுன?
இளங்கோவன்: உங்களேயே எடுத்துக் குடுக்கச் சொன்னேன். அப்பயும் முந்திரி பருப்பு கிடைக்கல. ஏமாந்துட்டேன்.
அம்மா: நாம முடிவு எடுக்காம, மத்தவங்கள நமக்காக முடிவெடுக்க விட்டுட்டோம்னா, அப்பயும் ஏமாத்தம் தான் மிச்சம். பாத்தியா, முந்திரி பருப்பை சட்டியிலேயே வைச்சிட்டு வெறும் கேசரியை கிண்ணத்துல வைச்சேன்.
இளங்கோவன்: இந்த கேசரியை வச்சி ஒரு வாழ்க்கைப்பாடத்தை கத்துக்கொடுத்திட்டீங்க. இனிமே மேலோட்டமா முடிவெடுக்க மாட்டேன். முன் அனுபவத்தை மட்டும் வச்சி முடிவெடுக்க மாட்டேன். நான் எடுக்க வேண்டிய முடிவை மத்தவங்க கையில விடமாட்டேன். நானே ஆழமா யோசிச்சி தீர விசாரிச்சி முடிவெடுப்பேன்.
(எல்லோரும் சிரிக்கிறார்கள்.)
அம்மா: இந்தாங்க. சட்டியில நிறைய முந்திரி பருப்பு இருக்கு எடுத்துக்குங்க.
*****
கருத்து: முடிவெடுக்கும் கலை, கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், ஆலோசனை, தன் கையே தனக்கு உதவி, எல்லோருக்கும் பயன்
எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம்
Comentários