top of page
Writer's pictureJohn Britto Parisutham

3. அன்பழகரும் மேலோகமும்


காட்சி - 1


இடம்: ஞானியின் ஆசிரமத்தில் அன்பழகர் என்ற சீடரின் அறை.

நேரம்: காலை 10:00 மணி

பாத்திரங்கள்: அன்பழகர், சீடர் 1, சீடர் 2


(அன்பழகர் ஏதோ பாட்டை முணுமணுத்துக்கொண்டே தன் அறைக்கு வருகிறார். கையில் ஒரு குவளையில் பால் கொண்டு வருகிறார்.)


அன்பழகர்:

(ஒரு மூங்கில் கூட்டில் உள்ள விஷப்பாம்பிடம் பேசுகிறார்.) மேலோகம்! நீ விஷ பாம்பா இருந்தாலும், உன்னை ஏன் வளர்க்கிறேன் தெரியுமா? மிருகங்கள்னா எனக்கு உயிர். அதுமட்டுமா? உனக்கு மேலோகம்’னு ஏன் பேரு வச்சிருக்கேன் தெரியுமா? உன்ன பாக்கும் போது எனக்கு அளவில்ல ஆனந்தம் வருது. மேலோகத்துல மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்’னு நம்ம குரு சொன்னாரில்லையா! அதனாலதான் உனக்கு மேலோகம்’னு பேர் வச்சிருக்கேன். இந்த ஆசிரமத்துல நான் தான் உன்னை வளர்க்கிறேன். உயிர்களிடத்து அன்பா இருக்கனும்’னு நம்ம குரு சொல்வாரில்லையா? இந்தா, பால் குடி.


(அப்பொழுது இரு சீடர்கள் அன்பழகர் அறைக்கு வருகிறார்கள்.)


சீடர் 1:

அன்பழகரே! மேலோகம் என்ன சொல்லுது?


அன்பழகர்:

உங்களுக்கு காலை வணக்கும் சொல்லுது.


சீடர் 2:

அன்பழகரே! இது விஷப் பாம்பு தானே? கடிச்சிடாதா?


அன்பழகர்:

மேலோகம் என் பிள்ளை மாதிரி. அத பாம்பு’ன்னு சொல்லாதீங்க. அதெல்லாம் கடிக்காது.


சீடர் 1:

அன்பழகரே! அது எப்படி? விஷப் பாம்பு கடிக்கத்தானே செய்யும்.

அன்பழகர்:

கிடையாது. நான் இதை அன்பா வளர்க்கிறேன். கடிக்காது.


சீடர் 2:

என்ன வேணாலும் சொல்லுங்க. எனக்கு பயமாத்தான் இருக்கு. நாங்க குருகிட்ட சொல்லத்தான் போறோம்.


(இரு சீடர்களும் அன்பழகரின் அறையை விட்டு வெளியில் செல்கிறார்கள்.)


அன்பழகர்:

(பாம்பை நோக்கி) மேலோகம். நீ கவலைப்படாதே!. நான் உன் அப்பா இல்லையா? உன் கண் கலங்காம பாத்துக்குவேன். நீ தூங்கு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.


(அன்பழகர் வெளியே போகிறார்.)



காட்சி - 2


இடம்: ஞானியின் ஆசிரமத்தில் ஞானியின் அறை.

நேரம்: காலை 11:00 மணி

பாத்திரங்கள்: ஞானி, அன்பழகர், சீடர் 1, சீடர் 2


(ஞானி யோகாசன நிலையில் தியானத்தில் இருக்கிறார். இரு சீடர்களும் அவரது அறைக்குள் மெதுவாக நுழைகிறார்கள். ஞானி விழித்துப் பார்க்கிறார்.)


ஞானி:

சீடர்களே! ஏதாவது விஷயம் இருக்கிறதா?


சீடர் 1:

ஆமாம் குருவே.


ஞானி:

என்ன சொல்லுங்கள்?


சீடர் 2:

அன்பழகர் ஒரு விஷப்பாம்பை தன் அறையில் வளர்த்து வருகிறார். எங்களுக்குப் பயமாக இருக்கிறது.


ஞானி:

அப்படியா? அன்பழகரை அழைத்து வாருங்கள்.


(சீடர் 1 வெளியேச் சென்று அன்பழகருடன் வருகிறார்)


அன்பழகர்:

வணக்கும் குருவே! அழைத்தீர்களாமே?


ஞானி:

ஆமாம். தங்கள் அறையில் ஒரு விஷப்பாம்பை வளர்க்கிறீர்களாமே?


அன்பழகர்:

ஆமாம். குருவே! அது என் மகன் போன்று வளர்க்கிறேன். அதற்கு மேலோகம் என்று பெயர் வைத்திருக்கிறேன்.


ஞானி:

மிருகங்கள் மேல் பரிவு காட்டுவது நல்லது தான். ஆனால் ஒரு விஷப்பாம்பை இப்படி ஆசிரமத்தில் வளர்ப்பது ஆபத்தானது. மற்றவர்களுக்கும் கஷ்டத்தை கொடுத்துவிடும்.


அன்பழகர்:

அப்படியெல்லாம் ஆகாது குருவே!


ஞானி:

அதனை எடுத்துச் சென்று காட்டில் விட்டுவிடுங்கள்.


அன்பழகர்:

தேவையில்லை குருவே. அது பாதுகாப்பாகத்தான் இருக்கிறது.


ஞானி:

சீடர்களே! சொல்ல மறந்து விட்டேன். நாளைக்கு நாம எல்லோரும் பக்கத்து ஊருக்குப் போகிறோம். சில நாட்கள் அங்கு வேலை இருக்கிறது. இப்பொழுது போய் வேலையைப் பாருங்கள்.


சீடர் 1:

(வெளியில் நடந்து வந்துக் கொண்டே) அன்பழகரே! பாம்பை காட்டில் விடப் போகிறீரா?


அன்பழகர்:

ம்ஹீம்!. முடியாது.


(அனைவரும் வெளியேறுகின்றனர்.)




காட்சி - 3


இடம்: ஆசிரமம்.

நேரம்: மாலை 4:00 மணி

பாத்திரங்கள்: அன்பழகர், சீடர் 1, சீடர் 2


(அன்பழகரும் இரண்டு சீடர்களும் உள்ளே வருகின்றனர்.)


சீடர் 1:

பக்கத்து ஊருக்கு போயிருந்தோம். நிகழ்ச்சிகள் முடிந்து விட்டன.


அன்பழகன்:

ஆமாம். ஆனால் சில நாட்கள் என்றார் குரு. ஆனால் பத்து நாட்களாகி விட்டது. என் பையன் மேலோகத்துக்கு முட்டை எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன். வாங்க! போய் என் மேலோகத்தைப் பார்ப்போம்.


(மூவரும் அன்பழகர் அறைக்குள் நுழைகிறார்கள்.)


அன்பழகர்:

என் கண்ணா! உன்னப் பாக்காம எனக்கு தூக்கமே வரல. நல்லா இருக்கியாடா கண்ணா? இதோ முட்டை வாங்கி வந்திருக்கேன். சாப்பிடு ( மூங்கில் கூட்டிற்குள் கையை விட்டு முட்டையைத் தருகிறார். ஆனால் பத்து நாள் பசியோடும் கோபத்தோடும் இருந்து பாம்பு, சடால்’ என கொத்திவிடுகிறது.)


அன்பழகர்:

(கையை திடுமென இழுத்து) ஐயோ! ஐயோ!! வலிக்குது. ரத்தம் வருது. (மயங்கி கீழே விழுகிறார்.)


சீடர் 2:

அட! நுரை தள்ளுது. கண்ணு உள்ள சொருகுது.


சீடர் 1:

என்ன பேச்சு மூச்சைக் காணோம். (மூக்கில் கையை வைத்துப் பார்க்கிறார்.) அட! இறந்து விட்டார்.


சீடர் 2:

ஐயோ பாவம்! குரு சொன்னதை அப்பொழுதே கேட்டிருந்தால் இப்பொழுது இப்படி ஆகியிருக்காது.



********


படிப்பினை: பெரியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லுகின்ற அறிவுரைகளை ஆழ்ந்து யோசித்து கடைப்பிடித்தல் நலம்.


எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம்


4 views0 comments

Recent Posts

See All

4. அரசர் ஓவியம்

நாடகத்தில் உள்ள பாத்திரங்கள் அரசர் மந்திரி குமரேசன் (ஓவியர்) அரும்பு (குமரேசனின் மனைவி) சேவகர் 1, சேவகர் 2 காட்சி 1 இடம்: குமரேசன் வீடு...

Comentários


bottom of page