top of page
Writer's pictureJohn Britto Parisutham

4. அரசர் ஓவியம்


நாடகத்தில் உள்ள பாத்திரங்கள்

அரசர்

மந்திரி

குமரேசன் (ஓவியர்)

அரும்பு (குமரேசனின் மனைவி)

சேவகர் 1, சேவகர் 2


காட்சி 1


இடம்: குமரேசன் வீடு

நேரம்: காலை 9:00 மணி

பாத்திரங்கள்: குமரேசன் (35), அரும்பு (குமரேசனின் மனைவி, 30)


அரும்பு, வீட்டுத் தோட்டத்தில் கீரைப் பறித்துக் கொண்டிருக்கிறாள். குமரேசன் துள்ளிக் குதித்து ஓடி வருகிறான்.


குமரேசன்:

அரும்பு!! அரும்பு!!! என் அன்பு மனைவியே எங்க இருக்கற புள்ள?


அரும்பு:

(குனிந்து கீரைப் பறித்துக் கொண்டே) இதோ! தோட்டத்துல இருக்கேன் மச்சான். கீரைப் பறிச்சிக்கிட்டு இருக்கேன்.


குமரேசன்:

(சந்தோஷத்தில் குதிக்கிறான்) ஐயோ! ஐயோ!! இதை எப்படி ஒன்னுட்ட சொல்வேன்? நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலயே.


அரும்பு:

(ஆவலுடன்) கையில ஓலையை வச்சுகிட்டு, குதிச்சிகிட்டே இருக்கீங்க. மச்சான்!! யார் அனுப்பிய ஓலை. என்ன எழுதியிருக்கு?


குமரேசன்:

அரும்பு! அரும்பு!! என் அன்பு மனைவியே, வாழ்நாள்ல உனக்கு என்ன ஆசை?


அரும்பு:

எனக்கு சின்ன புள்ளயிலேர்ந்து ஒரே ஆசை தான் மச்சான்.


குமரேசன்:

என்ன?


அரும்பு:

ஒழுகுற கூரை இல்லாத வீட்டுல வசிக்கனும் மச்சான்.


குமரேசன்:

ம்! அது கனவுலதான் நடக்கும். இப்போதைக்கு அது முடியாது. ஆனா நமக்கு சில பொற்காசுகள் கிடைக்க வழி வந்துடுச்சு.


அரும்பு:

என்ன மச்சான் சொல்றீங்க? ஒன்னுமே புரியலையே!! கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க மச்சான்.


குமரேசன்:

இப்படி வா! இங்க ஒக்காரு


(இருவரும் வீட்டு வாசற்படியில் உட்காருகிறார்கள்.)


அரும்பு:

ம்! சொல்லுங்க மச்சான். ஓலையில என்ன எழுதியிருக்கு? யார் அனுப்பியிருக்கா?


குமரேசன்:

இது அரண்மனையிலிருந்து வந்த ஓலை புள்ள.


அரும்பு:

அட! அரண்மனையிலேர்ந்து வந்த ஓலையா? நம்ம ஏழைக் குடும்பத்துக்கு அரண்மனையிலேர்ந்து யாரு ஓலை அனுப்பியிருக்கா?


குமரேசன்:

சாட்சாத் அரசரே அனுப்பியிருக்கார் புள்ள. (ஓலையை நீட்டி) பாரு. அரசரோட முத்திரை.


அரும்பு:

அட! ஆமா! அரசரோட முத்திரைதான். ஓலையில என்ன எழுதியிருக்கு மச்சான்?


குமரேசன்:

நீயே படிச்சிப் பாரு (ஓலையை அரும்பிடம் கொடுக்கிறான்.)


அரும்பு:

(ஓலையை வாங்கிப் படிக்கிறாள்.) அரசரின் ஓவியத்தை அப்படியே வரைந்து கொடுக்க பணிக்கப்படுகிறது. ஓவியம் அச்சு அசலாக அரசர் போலவே இருந்தால், தகுந்த சன்மானம் கொடுக்கப்படும். (குமரேசனை நோக்கி) என்ன சன்மானம் கொடுப்பாங்க அத்தான்?


குமரேசன்:

(கிண்டலாக) ம்! கழுத்துலேர்ந்து கால்வரை தொங்கறமாதிரி பெரிய முத்துமாலை கொடுப்பாங்க. அடி போடி. ஏதோ சில பொற்காசுகள் கொடுப்பாங்க.


அரும்பு:

(மகிழ்ச்சியுடன்) மச்சான்! உடனே அரண்மனைக்குக் கிளம்பிப் போங்க. நான் மணத்த தக்காளிக் கீரைக் கொழம்பு வச்சி வைக்கிறேன்.


(குமரேசன் கிளம்பிப் போகிறான். அரும்பு பறித்த கீரையோடு வீட்டிற்குள் போகிறாள்.)



காட்சி 2


இடம்: மந்திரியின் அறை, அரசரின் அரண்மனை

நேரம்: காலை 11:00 மணி

பாத்திரங்கள்: மந்திரி, குமரேசன் (35), சேவகன் 1,


மந்திரி:

யாரங்கே!


(சேவகன் 1 மந்திரியின் அறைக்குள் நுழைகிறான்)


சேவகன் 1:

(வணங்கியபடி) மந்திரியாரே!


மந்திரி:

ஓவியர் குமரேசனுக்கு ஓலை அனுப்பியிருந்தோமே! யாரும் வந்தார்களா?


சேவகன் 1:

மந்திரியாரே! அவர் வந்து காத்திருக்கிறார்.


மந்திரி:

ஓ! அப்படியா? அவரை உள்ளே அழைத்து வாரும்.


(சேவகன் 1 வெளியேச் சென்று குமரேசனை அழைத்து வருகிறான்.)


குமரேசன்:

(வணங்கியபடி) மந்திரியாரே! வணக்கம். நான் தான் பெரியசாமி மகன் குமரேசன். அடியேன் ஓவியம் வரைவேன். அரண்மனையிலிருந்து ஓலை வந்தது.


மந்திரி:

நல்லது. ஓவியரே. அரசரின் ஓவியத்தை வரையவேண்டும். முடியுமா?


குமரேசன்:

அது எனக்கு கிடைத்த பாக்கியம் மந்திரியாரே!


மந்திரி:

சிறப்பாக வரைந்தால் நிறைய வெகுமதி கிடைக்கும். எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும். நாளையிலிருந்து தொடங்கிவிடுங்கள். வரும் புத்தாண்டு விழாவில் பல நாட்டு மன்னர்கள் வருகை புரிவார்கள். அன்றைக்கு அந்த ஓவியத்தை வெளியிட அரசர் முடிவு செய்துள்ளார்.


குமரேசன்:

நல்லது மந்திரியாரே! அப்படியே செய்து விடலாம்.


மந்திரி:

(ஓலை ஒன்றைக் கொடுத்து) இதோ! அதற்கான ஒப்பந்த ஒலை. (ஒரு பணமுடிப்பைப் கொடுத்து) இந்த முன்பணத்தையும் வைத்துக்கொள்ளுங்கள்.


குமரேசன்:

நன்றி மந்திரியாரே. நான் வருகிறேன். (மந்திரியின் அறையிலிருந்து வெளியேறுகிறான்.)



காட்சி 3


இடம்: மந்திரியின் அறைக்கு வெளியே, அரசரின் அரண்மனை

நேரம்: காலை 12:00 மணி

பாத்திரங்கள்: குமரேசன் (35), சேவகன் 1, சேவகன் 2


குமரேசன் மந்திரியின் அறையிலிருந்து வெளியே வருகிறான். இரண்டு சேவகர்கள் வெளியே நிற்கிறார்கள்.


சேவகர் 1:

(நக்கலாக சிரித்துக் கொண்டே) இவருக்கு எத்தனை கசையடிகளோ, எத்தனை வருட சிறைத்தண்டனைகளோ?


சேவகர் 2:

(கையைத் தட்டி சிரித்துக் கொண்டே) அதைச் சொல்லு. இவர் உடல் இதை தாங்காது போல் தான் இருக்கிறது.


(குமரேசன் நிற்கிறான். அவர்களை நோக்கி நடந்து வந்து)


குமரேசன்:

என்ன சொல்கிறீர்கள்? ஏன் அப்படி சொல்கிறீர்கள்?


சேவகர் 1:

போன மாசம் ஓர் ஓவியர் வந்தார். அவர் ராஜாவை அப்படியே அச்சு அசலாக வரைந்துக் கொடுத்தார். அவருக்கு நூறு கசையடிகளும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் கிடைத்தது


குமரேசன்:

அச்சு அசலாக வரைந்து கொடுத்ததற்கா இத்தனை கசையடிகள்? இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை?


சேவகர் 2:

ஆமாம்! நம்ம ராஜாவைப் பற்றித்தான் ஊருக்கே தெரியமே! கர்வம் பிடித்தவர். அது மட்டுமா! அவரைப்பற்றி குறைவாக யாராவது சொல்லிவிட்டால் உடனே தண்டனை தான்.


குமரேசன்:

அதற்கும் அச்ச அசலாக வரைந்து ஓவியத்திற்கும் என்ன தொடர்பு?


சேவகர் 1:

நம்ம ராஜாவுக்கு ஒரு கண் குருடல்லவா! அதை அப்படியே தத்ரூபமாக வரைந்திருந்தார். என்ன ஆணவம் உனக்கு! நான் குருடன் என எல்லோரும் எள்ளி நகையாடட்டும் என இப்படி வரைந்திருக்கிறாயா? என அரசர் சொல்லி அந்தத் தண்டனைக் கொடுத்தார்.


குமரேசன்:

(பதறியபடியே) ஐயோ! அப்படியா?


சேவகர் 2:

இன்னும் கேளுங்க. அப்புறம் ஓர் ஓவியர் வந்தார். முன்னால் நடந்ததைக் கேள்விப்பட்டு இரண்டு கண்களும் நன்கு தெரிவதைப் போல வரைந்துக் கொடுத்தார்.


குமரேசன்:

அரசர் மகிழ்ச்சி அடைந்தாரா?


சேவகர் 1:

எங்கே! அவருக்கும் தண்டனை தான். இப்பொழுது இருநூறு கசையடிகள். நான்கு ஆண்டுகள் சிறை.


குமரேசன்:

(பயம் கூடியபடி) அப்படியா? அது ஏன்?


சேவகர் 2:

என்னை வரைந்துக் கொடுக்கச் சொன்னால், யாரையோ வரைந்துக் கொடுக்கிறாயே. எனக்கு இரண்டு கண்களும் இருக்கிறதா? என்று வசைபாடி விட்டார்.


குமரேசன்:

(குழப்பமாக) ஐயோ! அப்பறம் எப்படித்தான் வரைவது?


சேவகர் 1:

அதனால் சொன்னோம். தங்களுக்கு எத்தனை கசையடிகளோ சிறைவாசமோ?


குமரேசன்:

இரண்டு ஓவியர்களைப்பற்றி சொன்னதற்கும் நன்றி. நான் வருகிறேன்.


(வீட்டிற்கு கிளம்புகிறான்.)



காட்சி 4


இடம்: குமரேசன் வீடு

நேரம்: மாலை 3:00 மணி

பாத்திரங்கள்: குமரேசன் (35), அரும்பு


(அரும்பு வீட்டிற்குள்ளிருந்து ஓடி வருகிறாள். குமரேசன் வாடிய முகத்தோடு வருகிறான்.)


அரும்பு:

வாங்க! வாங்க!! மொதல்ல மோர் குடிங்க. அப்பறம் கீரைக் கொழம்பு வச்சிருக்கேன். சாப்பிடலாம். சொல்லுங்க. அரசரைப் பார்த்தீர்களா? ஓவியம் வரையச் சொன்னாரா? எவ்வளவு வெகுமதி தருவதாகச் சொன்னார்?


குமரேசன்( சோகத்தோடு):

ம்! வரையச் சொன்னார்.


அரும்பு:

(குமரேசன் தொங்கிய தலையோடு வாடிய முகத்தோடு இருப்பதைப் பார்த்து) அத்தான்! ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?


குமரேசன்:

அதை ஏன் கேட்கிற! நம்ம அரசருக்கு ஒரு கண் பார்வை இல்லை. அதை அப்படியே வரைந்த ஓவியருக்கு நூறு கசையடிகளும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் கொடுத்தார்களாம்.


அரும்பு:

அப்படியா?


குமரேசன்:

அதை மாற்றி இரண்டு கண்களும் இருப்பதைப் போல் வரைந்த இன்னொரு ஓவியருக்கு இருநூறு கசையடிகளும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனைகளும் கொடுத்தார்களாம்.


அரும்பு:

ஓ! அப்படியா?


குமரேசன்:

அதனால் தான் நான் குழம்பிப் போய் இருக்கிறேன்.


அரும்பு:

மச்சான். கவலைப்படாதீர்கள். ஒரு பிரச்னை வந்தால் அதை வாய்ப்பாக கருதி, நமது மதிநுட்பத்தால் வெல்ல வேண்டும். துவண்டுவிடக்கூடாது என நீங்கள் தானே அடிக்கடி சொல்வீர்கள்.


குமரேசன்:

ஆமாம். ஆனால் இது தலை போகிற பிரச்னையாக இருக்கிறதே!


அரும்பு:

இருக்கட்டும். ஒரு மூளைக்குப் பதில் இரண்டு மூளை சேர்ந்து யோசிப்போம்.


(இருவரும் யோசிக்கிறார்கள்.)


அரும்பு:

மச்சான். இப்படி செய்தால் என்ன?


குமரேசன்:

எப்படி?


(அரும்பு குமரேசன் காதில் ஏதோ சொல்கிறாள்)



காட்சி 5


இடம்: அரண்மனை

நேரம்: மாலை 3:00 மணி

பாத்திரங்கள்: குமரேசன் (35), அரும்பு (30), அரசர், மந்திரி, சேவகர் 1, சேவகர் 2



(குமரேசனும், அரும்பும் ஓர் ஓவியத்தை துணியால் மூடி எடுத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள்.)


சேவகன் 1:

வாருங்கள் ஓவியரே. வாருங்கள் அம்மா.


குமரேசன்:

நன்றி. இதோ! ஓவியத்தை எடுத்து வந்திருக்கிறேன். இது என் மனைவி அரும்பு.


சேவகன் 2:

இங்கேயே இருங்கள். விழாவுக்கு போகும் முன்பு அரசரும், மந்திரியாரும் உங்களை இங்கேயே சந்திப்பார்கள். ஓவியத்தை அப்படி வையுங்கள்.


(குமரேசன் துணி போட்டு மூடியிருந்த ஓவியத்தை ஒதுக்குப்புறமாக வைக்கிறான்.)


குமரேசன்:

நீங்கள் அன்று ‘இவருக்கு எத்தனை கசையடிகளோ, எத்தனை வருட சிறைத்தண்டனைகளோ’ என்று சொன்னீர்கள். அது தான் இப்பொழுது ஞாபகம் வருகிறது.


சேவகன் 1:

இப்பொழுதும் உங்களுக்காக வருந்துகிறோம்.


சேவகன் 2:

இராஜாதி இராஐ, இராஐ மார்த்தாண்ட, இராஜ குல திலக அரசர் வருகிறார். பராக்! பராக்!! பராக்!!!


(அரசரும், மந்திரியாரும் உள்ளே நுழைகிறார்கள்.)


அரசர்:

(நுழைந்துக் கொண்டே) என்ன ஓவியரே! இது தான் உங்கள் மனைவியா?


குமரேசன்:

ஆமாம் அரசே!


அரசர்:

கடைசி இரண்டு நாட்கள், உங்கள் மனைவி விருப்பப்படி, தங்கள் வீட்டில் வைத்து ஓவியத்தை வரையவேண்டும் என்று கேட்டுக் கொண்டீர்கள். அப்படி என்ன புதிதாக சேர்த்தீர்கள்.

(கைதட்டி) யாரங்கே! அந்த ஓவியத்தில் உள்ள துணியை விலக்குங்கள்.


(சேவகன் 1 துணியை விலக்குகிறான்.)


அரசர்:

(ஆச்சரியத்தில்) அட! இது என்ன விந்தை? யாரங்கே! குமேரசருக்கு முத்து மாலையும் ஆயிரம் பொற்காசுகளும் சன்மானமாகக் கொடுங்கள். (தொடர்ந்து மந்திரியை நோக்கி) மந்திரியாரே! பலே! இது போன்ற திறமையை நான் பார்த்ததில்லை. அச்சு அசல் என்னைப் போலவே இருக்கிறது. குமரேசன், தான் ஒரு சிறந்து ஓவியர் என்று நிருபித்துவிட்டார்.


மந்திரி:

ஆம் அரசே! நீங்கள் ஒரு கண்ணை மூடி, இன்னொரு கண்ணால் குறிவைத்து, வில்லில் அம்பு பூட்டி மானை குறிவைப்பது போல ஓவியம் இருக்கிறது. நீங்கள் குறை என நினைத்துக் கொண்டிருப்பது இதில் தெரியாத மாதிரி புத்திசாலித்தனமாக வரைந்திருக்கிறார்.


( குமரேசனுக்கு பொற்காசுகளும், முத்துமாலையும் கொடுக்கிறார்கள்.)


குமரேசன்:

அரசே! இந்தப் பெருமை என் மனைவி அரும்புக்கே சொந்தம். அவள் தான் இந்த கருத்தை எனக்குச் சொன்னாள்.


அரசர்:

அற்புதம். ஓவியரின் மனைவிக்கு என்ன விருப்பம் என்று சொன்னால், அது உடனே நிறைவேற்றப்படும்.


அரும்பு:

அரசே! தாங்கள் கொடுக்கும் கௌரவமே எங்களுக்கு போதும்.


குமரேசன்:

இருந்தாலும் எங்கள் வீட்டு கூரை கீத்தால் ஆன கூரை. ஒழுகாத வீட்டில் வாழவேண்டும் என்பதே அரும்பின் கனவு.


அரசர்:

யாரங்கே! ஓவியர் வாழ்வதற்கு ஒரு சிறு அரண்மனையை ஏற்பாடு செய்யுங்கள்.


அரும்பு:

அரசே! உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி.


அரசர்:

சரி! வாருங்கள். எல்லோரும் புத்தாண்டு விழாவிற்கு செல்வோம்.


(எல்லோரும் கிளம்புகிறார்கள்)


**********


படிப்பினை: அறிவு, படைப்பாற்றல் சிந்தனை, திறமை, கூட்டு சிந்தனை, பிரச்னைகளைத் தீர்த்தல்

எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம்

6 views0 comments

Recent Posts

See All

3. அன்பழகரும் மேலோகமும்

காட்சி - 1 இடம்: ஞானியின் ஆசிரமத்தில் அன்பழகர் என்ற சீடரின் அறை. நேரம்: காலை 10:00 மணி பாத்திரங்கள்: அன்பழகர், சீடர் 1, சீடர் 2 (அன்பழகர்...

Comments


bottom of page