top of page

6. காசும் மரியாதையும்

Updated: May 1, 2023

பாலைப்பட்டி ஊருக்குள்ள 
 பாவப்பட்ட ஒரு குடும்பம் - அதில்
 ஒலைக் குடிசையில் மூவர் இருந்த
 ஒண்டுக் குடித்தனம் ஒன்றுண்டு.
 காலை எழுந்ததும் வேலை சென்று 
 கூலி பெற்றால் சோறுண்டு - அவர்
 மாலை வந்ததும் தாயைப் பேணும் 
 மகன்கள் ரெண்டு பேருண்டு.
 
 அண்ணன் பேரு இரும்பொறையாம் - அவன்
 தம்பி பேரு கூத்தபிரான்
 பண்ணை யாரு வீட்டினிலே
 வேலை செய்து கூலி பெற
 அண்ணன் சென்றான் தம்பி இருந்தான்
  வீட்டினில் தாயும் நோயாக
 கண்ணில் எண்ணெய் ஊற்றி அவரை
 கவனித்திருந்தான் அன்பாக.
 
 மூணு காசு கூலிக்கு 
 பண்ணையாரு வேலைக்கு
 வேணுமென்றே இரும்பொறையும் 
 வேகமாகத் தான் செல்ல
 தூண்டில் தேடி தானே வந்து
 தலையைக் கொடுத்த மீனாக
 வேண்டி நின்ற வேலைதன்னில்
 ஆகப் போறான் வீணாக.
 
 செய்யா வேலை ஒவ்வொன்றும்
 இழக்கும் காசு ஒவ்வொன்றென
 ஐயா பண்ணை பேசிடவே
 அவனும் ஒத்து பணி செய்தான்.
 கொய்யா மரத்துக்கு குழி பறித்தான்
 கொல்லை முழுதும் வழி பறித்தான்
 பெய்யா மழையால் வாடி நின்ற
 பெரிய தோட்டம் களைப் பறித்தான்.
 
 வேர்வை கழுவி முகம் துடைத்து
 ஆர்வமுடன் கூலி பெற - அவன்
 பார்வை பண்ணை யாரிடம் வர
 மேலும் வேலை  இருக்கு என்றார்.
 கோர்வை யாக மூணு வேலை
 கொடுப்பேன் செய்து முடித்துவிட்டால்
 தீர்வை யாக மூணு காசும்
 தீர்க்கமாக பெறு என்றார்.
 
 பெரிய பானை எடுத்த தனை
 சிறிய பானைக்குள் வைத்தே வா
 ஈர நெல் வெளி எடுக்காமல்
 கூரைக்குள்ளே காய்த்தே வா
 உடலின் எடையைச் சொல்ல - நீ
 தலையின் எடையை கணித்தே வா
 என அவர் மூன்று வேலைகளை
 ஏமாற்றிடவே கொடுத்தாரே!
 
 இரும்பொறை இதற்கு எல்லாமே
 இயலா தெனவே சொல்லிவிட்டான்.
 இயலா தெனவே சொல்லியதால்
 இல்லை கூலி என மறுத்தார்.
 வெறுங்கையாக வந்ததனால்
 தம்பி நடந்ததைக் கேட்டறிய
 மறுநாள் தானே பண்ணைக்குப் 
 போக முடிவு எடுத்திட்டான்!
 
 மறுநாள் கூத்தன் பண்ணைக்கு
 மனசில் பாரம் நீங்காமல்
 ஒருநாள் முழுதும் வேலைக்கு
 ஒத்துக் கொண்டு சென்றானே.
 சிறிதும் மாறா பண்ணையார்
 செய்தார் அதே ஒப்பந்தம்
 பெரிதும் எதையும் காட்டாமல்
 முழு நாள் வேலை செய்திட்டான்.
 
 கூலி கேட்டு கூத்தபிரான்
 வேலி அருகே நின்றிடவே
 மூணு வேலை இருக்கென்று
 முட்டுக்கட்டை போட்டாரே!
 பானை ஒன்று பெரிசிருக்க
 பாத்தே சின்னதில் போடு என்றார்
 நூறாய் அதனை உடைத்து அவன்
 நேராய் சின்னதில் போட்டுவைத்தான்.
 
 ஈர நெல்லை காய்ச்சிடவே
 கூரை அதனை பிய்த்திட்டான்
 வீரத்தோடு அரிவாளை
 பண்ணை தலை வரை வைத்திட்டான்.
 காரத்தோடு பேசிட்டான்
 கலங்கிப் போனார் பண்ணை யார்
 பாரத்தோடு போன அவன்
  பாய்ச்சல் புலியாய் திரும்பி வந்தான்.
 
 அவனது கூலி மூணு பெற்று
 அண்ணன் கூலி அதிகம் பெற்று
 சிவனது நீதி கேட்டது போல்
 அதற்கும் கூலி மூணு பெற்றான்.
 இவனுக்கு வந்த சிந்தனையே
 எவருக்கும் வரனும் என்றிடவே
 மவனுக்கு சொன்ன அறிவுரையை
 மக்கள் உமக்கும் சொல்கின்றேன்.
 
 *************
 படிப்பினை: ஆய்வுச்சிந்தனை, படைப்புச் சிந்தனை, நீதி, ஏமாறாமல் தப்பிப்பது, சாமார்த்தியம்
 பாடல் ஆசிரியர்: ஜான் பி. பரிசுத்தம்
1 view0 comments

Comments


bottom of page