top of page

வாழ்த்துரை

Sep 18, 2024
4 min read

Updated: Feb 27, 2025




வாழ்த்துரை


திரு. அகநம்பி அவர்களைப் பல ஆண்டுகளாக நான் அறிந்திருக்கிறேன். பல நூல்களைப் படித்து, தாம் கற்றவற்றைப் பிறருக்கு பகிரும் நல்ல நோக்கத்துடன், கட்டுரைகளை எழுதுவதும், மேடைகளில் பேசுவதும், நூல்களை வெளியிடுவதும் என ஒரு கருத்தாளராகவும், சமூக அக்கறையாளராகவும் திகழ்ந்து வருபவர் திரு. அகநம்பி அவர்கள்.


அவரது பல சிறந்த கட்டுரைகளைச் சேர்த்துள்ள இந்த நூல் தமிழுலகத்திற்கு கிடைக்கின்ற முக்கிய ஆவணமாகும். இதில் மொழி மற்றும் ஊடகம், இசை மற்றும் கலை, சுற்றுச் சூழல் மற்றும் தொழிற்நுட்பம், தொழில்துறை மற்றும் எதிர்கால இளையோர் எனப் பல்வேறு அம்சங்கள் வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன.


மொழி மற்றும் ஊடகம்

மொழி மற்றும் ஊடகம் என்கிற தொகுதியில் ஐந்து கட்டுரைகளை ஆசிரியர் எழுதி இருக்கிறார். அவைகளைப் படிக்கும் போது ஆசிரியரின் சமூக அக்கறை மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. திரைப்படக் கவர்ச்சி நடிகைகளுக்கு நேரமும் இடமும் ஒதுக்கித் தரும் ஊடகங்களை வெகுவாகச் சாடி விட்டு, ஊடகத்தின் சமூக வளர்ச்சிக் குறிக்கோளை நியாயமாக நினைவுபடுத்துகிறார். குடிநீர், கல்வி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்க ஊடகங்களை ஊக்கத்தோடு அழைக்கிறார். அடுத்து, இதழியில் மீது ஆசிரியருக்கு உண்டான காதலும் இக்கட்டுரையில் புரிகிறது. முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடக உலகில் உச்சத்தில் இருக்கும் பொழுது இதழியல் எதிர்நீச்சல் போட்டு முன்னேறவேண்டியதன் அவசியத்தையும் இதழியலாளர்களுக்கு இருக்கும் சவால்களையும் இனிதே எடுத்துரைக்கிறார்.


மத்திய அரசின் நிதி பற்றிய ஒரு கட்டுரையில் கூட, மொழியின் ஆளுமையை மொழிகிறார். இந்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சராக இருந்த தமிழர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களின் பங்கு பற்றி குறிப்பிடும் பொழுது ‘அழிவதும் ஆவதும் ஆகி வழிபயக்கும் ஊழியமும் சூழ்ந்து செயல்’ என்கிற குறளை விளக்குகிறார்.


‘தமிழ் வளர்த்த வெளி நாட்டவர்கள்’ என்றக் கட்டுரையில் பல வெளிநாட்டவர்கள் எடுத்த முயற்சிகள் ஆதாரங்களோடு விவரிக்கப்படுகின்றன. போர்த்துகீசிய நாட்டு ‘என்றிக்கே என்றீக்கசு’ முதல் இத்தாலி நாட்டு ‘இராபர்டேர் நோபிலி’ வரை பலரின் வாழ்க்கைச் சாதனைகளை அழகாக விளக்குகிறார். அவர்கள் தமிழுக்கு ஆற்றிய அரும்பெரும் பணிகளைச் சுட்டிக்காட்டி, வாசகர்களைத் தட்டி எழுப்புகிறார். ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த பர்த்தலேமேயு சீகன் பால்க், ஏழு மாதங்கள் கப்பல் பயணம் மேற்கொண்டு தரங்கம்பாடி வந்தடைந்து, கடற்கரை மணலில் தமிழ் கற்று, குழந்தைகளுக்கான இல்லமும் பள்ளியும் தொடங்கி, இந்தியாவின் முதல் அச்சகத்தை அமைத்து, தமிழ் இலக்கிய நூல்களை எளிய முறையில் அச்சடித்து விநியோகம் செய்தது வரை அவர் விவரிக்க, வாசகர்களின் கண்கள் அகல அகல விரிந்துக் கொண்டே போகிறது. வருங்கால தலைமுறையினர் நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரைகளில் ஒன்றாக அது மிளிர்கிறது.


‘அகராதியியல் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கட்டுரை குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த கட்டுரை என்று நான் கருதுகிறேன். திருமூலரின் திருமந்திரத்தில் முதன்முதலாகக் காணப்படும் ‘அகராதி’ என்ற சொல், தொல்காப்பியத்தில் ‘பனுவல்’ என்றும் வடமொழி கலப்பில் ‘நிகண்டு’ என்றும் கூறப்பட்டு பின்னர் தேவநேயப் பாவாணர் ‘அகரமுதலி’ என்று மாற்றிய தரவை அழகாக விளக்குகிறார். வெவ்வேறு காலக்கட்டத்தில் பலரும் எழுதிய அகராதிகளை பட்டியலிடுவது வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இசை மற்றும் கலை

இசை மற்றும் கலை என்பவற்றில் ஆசிரியர் நான்கு கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றை வாசிக்கும் போது, தமிழ் கலைகளுக்கும் தமிழ் இசைக்கும் ஆசிரியர் கொண்டுள்ள ஆழமான ஆர்வம் தெளிவாகப் புரிகிறது. அகத்தியம், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பல்வேறு இலக்கியச் சான்றுகளிலிருந்து சங்கீத மூம்மூர்த்திகள் வரை ஆய்வு செய்து, தமிழிசையின் இலக்கணத்தையும் அதன் வளர்ச்சியையும் அழகாக எழுதுகிறார். தமிழிசை தெற்காசிய நாடுகளுக்கு எவ்வாறு பரவியது என்பதையும் சான்றுகளுடன் நிறுவுகிறார். மலேசியாவின் கெடா பகுதியில் கிடைத்த கல்வெட்டை எடுத்துக்காட்டி, வணிகத்துடன் பண்பாட்டையும் பகிர்ந்துள்ள தகவலை வெளிப்படுத்துகிறார்.


‘களிப்பூட்டும் கழியலாட்டம்’ என்ற கட்டுரையில், கலைகளின் நோக்கத்தையும் வகைகளையும் குறிப்பிட்டு, குமரி மாவட்டத்தில் கழியலாட்டம் விளையாடும் முறையை பாடலுடன் விவரிக்கிறார். ‘மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழர் இசை’ என்ற கட்டுரையில் இசை முறைகளையும் இசைக் கருவிகளையும் திறம்பட விவரிக்கிறார். மலைபடுகடாம் போன்ற இலக்கிய நூல்களையும், திருச்செந்தூர் கல்வெட்டுகளையும் காண்பித்து தமிழ் இசை பற்றி ஆய்வு செய்கிறார். குடுமியான் மலை முதல் சந்திரகிரி வரையிலான கல்வெட்டுகளில் உள்ள இசைக் கலைஞர்களின் பெயர்களை பட்டியலிடுகிறார். தாராபுரம் முதல் திருவட்டாறு வரையிலான கோவில்களில் உள்ள இசைச் சிற்பங்களை எடுத்துக்காட்டாக பயன்படுத்துகிறார். மருத்துவமாகவும், ஊடகமாகவும் இசை செயல்படுவதை எடுத்துரைக்கிறார்.


‘கைக்கொடுக்கும் கரலாக்கட்டை’ சுவாரஸ்யமான மற்றொரு கட்டுரை. ‘கைகர்லா, புசகர்லா, தொப்பைகர்லா, குஸ்திகர்லா, பிடிகர்லா’ போன்ற 64 கர்லா முறைகள் இருப்பதை விளக்கி இதன் தொன்மையையும் தொடர்ச்சியையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.


சுற்றுச் சூழல் மற்றும் தொழிற்நுட்பம் 

சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்நுட்பம் தொடர்பான நான்கு கட்டுரைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். அவற்றைப் படிக்கும் போது, மனித சமூகம் இயற்கையை நேசிக்கும் விதத்தை உணரலாம். சுற்றுச்சூழலை மேம்படுத்த தேவையான தொழில்நுட்பத்தையும் அவர் விவரிக்கிறார். புதை எரிபொருட்களுக்கு மாற்றாக, நிலையான மாற்று எரிவாயுக்களில் ஒன்றான சூரிய ஆற்றல் மற்றும் கடல் காற்றாலை மின் சக்தியின் அவசியத்தை ஆதாரங்களுடன் விளக்குகிறார். மத்திய அரசும் மாநில அரசும் இதற்காக எவ்வாறு திட்டமிடுகின்றன என்பதையும் சான்றுகளுடன் பட்டியலிடுகிறார்.


‘நீர்நிலைகளை நேசிப்பதுடன் பாதுகாப்பதும் நமது கடமை’ என்ற கட்டுரை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அறிவியல் மற்றும் இலக்கியத்தை இணைத்து வழங்கும் இரசவாதம் ஆசிரியரின் திறமையான கலை. சங்க கால புலவர் காராயாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம் நூலிலிருந்து பாடலை மேற்கோள் காட்டியபோது, 71% நீரால் சூழப்பட்ட பூமியின் அறிவியல் தகவல்களை அடுக்குகிறார். சுவாரஸ்யமான தகவல்களை வழங்குவதில் ஆசிரியருக்கு நிகர் அவரே. பெரிய குளங்கள் இருந்த ஊர் ‘பெருங்களத்தூர்’, ஏரியும் காடுகளும் நிறைந்து ஊர் ‘ஏரிக்காடு’ ஆகி ‘ஏற்காடு’ ஆனது என்றும் மேலும் குழித்துறை, ஒழுகினசேரி என ஊர்களின் பெயர்களைச் சுட்டி விளக்குகிறார். நீர் மேலாண்மையின் அவசியத்தை தெளிவாக எடுத்துரைக்கிறார்.


‘வள்ளுவம் போற்றும் வான்மழை’ என்ற சிறப்புக் கட்டுரையில், நீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் மேலாண்மை பற்றி மேலும் விளக்குகிறார். மழையை வள்ளுவர் ‘வான் சிறப்பு’ என்கிற அதிகாரத்தில் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டி, தமிழர்களின் பண்பாட்டுத் தளத்தில் மழைக்கு ‘மாரி’ என்ற சொல் வழங்கப்படுவதையும், அதன் மேன்மையை மேலும் உயர்த்த ‘மாரியம்மன்’ வழிபாட்டையும் எடுத்துக்காட்டுகிறார். இயற்கையின் இயல்பை அழகாக விவரிக்கும் போது, மழை வருமுன் உயிரினங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை வாசகர்களின் கண்முன்னே கொண்டு வருகிறார். எறும்புகள் உணவுத் துகள்களை எடுத்துக் கொண்டு மேடான இடத்துக்குச் செல்வது முதல், பறவைகள் தாழ்வாக பறப்பது வரை காட்சிகளை வர்ணிக்கிறார்.


‘குளிர்ச்சி தரும் கொல்லிமலை’ கட்டுரை நம் மனங்களை குளிரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கொல்லிமலைக் கதையை சங்க காலத்திலிருந்து தொடங்குகிறார். புறநானூற்றில் பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் ‘கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’ என்ற சொல்லாட்சியையும், குறுந்தொகையில் கபிலர் குறிப்பிடும் ‘வல்வில் ஓரி கொல்லிமலை’ என்ற பகுதியையும் சுட்டிக்காட்டி தனது வாதத்திற்கு வலுசேர்க்கிறார். இன்றைய கொல்லிமலைக்கு வாசகர்களையும் பயணிக்க வைக்கிறார். சாலையில் இருபுறமும் ஏலக்காயும், பாக்கும், தென்னையும், வாழையும், மூங்கிலும், தேக்கும், வெற்றிலையும், மிளகும் நேர்த்தியாக வளர்ந்து உள்ளதை ஒரு நாவலாசிரியர் போல காட்சிப்படுத்துகிறார். அது எப்படி சித்தர்களின் சொர்க்கபூமியாக இருந்தது என்றும் இப்பொழுதும் இருக்கிறது என்றும் விளக்குகிறார்.


தொழில்துறை மற்றும் எதிர்கால இளையோர்

தொழில்துறை மற்றும் எதிர்கால இளையோர் என்கிற பிரிவில் மூன்று கட்டுரைகளை எழுதியுள்ளார். தொழில் துறையில் நேற்றைய இந்தியா எந்த நிலையில் இருந்தது என்றும், இன்றைய இந்தியா எந்த நிலையில் உள்ளது என்றும் வருங்காலத்தில் நாளைய இந்தியா உலக சந்தையை எப்படி கைப்பற்றும் எனவும் புள்ளிவிவரங்களுடன் வாசகர்களுக்கு வாதங்களை முன்வைக்கிறார். அதற்கு லேண்ட் மார்க் குழுமத்தின் மேக்ஸ் பேசன் நிறுவனம் முதல் பிக் பஜார் நிறுவனம் வரை எடுத்துக்காட்டுகளை வழங்குகிறார். மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை தரவுகளுடன் முன்வைக்கிறார். ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்களை அமைப்பது குறித்து விளக்குகிறார்.


‘எதிர்கால இளையோர்’ என்கிற கட்டுரையில் நூல் ஆசிரியர் வருங்கால இந்தியாவைப் பற்றி கவலைப்படுகிறார். அதே நேரத்தில், இளம் தலைமுறைக்கு நம்பிக்கை அளிக்க வழிகாட்ட வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் மாணவி தற்கொலை முதல் விருத்தாச்சலம் மாணவி தற்கொலை வரை சான்றுகளை காட்டி, அதற்கானக் காரணங்களை ஆய்வு செய்வதோடு, அடுத்ததாக செய்யவேண்டியது என்ன என்பதையும் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, பெற்றோரும் மற்றோரும் படிக்கும் மாணவர்களை பாராட்ட வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறார். குறைந்தபட்சம் அவர்களோடு அளாவளாவ வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறார். அதோடு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த செய்யவேண்டிய இயல்பான முறைகளை விளக்குகிறார். மொத்தத்தில், வருங்கால தலைமுறையை ஆற்றல் மிக்க குடிமக்களாகவும், சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கையுடன் குறிக்கோள் உடையவர்களாகவும், நல்ல பண்பாடும் பழக்க வழக்கமும் கொண்டவர்களாகவும் உருவாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை என்று வலியுறுத்துகிறார்.


திரு. அகநம்பி அவர்களின் இந்த அருமையான பணியைப் பாராட்டுகிறோம். அவர் மேலும் மேலும் கருத்துகளை ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்ந்த கருத்துகளை, அவருடைய தனித்துவமான பாணியில் பிறருடன் பகிர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.


நன்றி


பெயர்

நாள்








Comments


John Britto Academy (JOBA), Australia is an educational academy, online and offline, for learning and living sustainably. It is a registered business name in Australia, recorded with the Australian Securities and Investments Commission (ASIC) since 30 August 2021.

​

Our team of honorary experts works across education, health, organic farming, technology, psychology, philosophy, human development, media and communication, and art and literature. We work with schools, civil society organisations and scholars in Malaysia, India, Sri Lanka, Australia and Singapore.

Our sister organisation, Global Giving Group Incorporated (3G), an incorporated association registered in Australia since 2018, brings together young people in 43 countries.

JOBA Logo transperent_edited.png

JOBA

Australia

Registered in Australia: ASIC under section 33(8) of BNR Act 2011

bottom of page