top of page

1. புதுத்தெரு வீடுவலங்கைமான்.


இது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அருகே கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் குட்டி நகரம். நகரம்? ம்! ஊர் என்பதே பொருத்தம். அல்லது பெரும் ஊர் என வைத்துக் கொள்ளலாம். 1960களில் அது ஒரு பெரிய கிராமம் என்று சொல்லலாம்.


அங்கே புதுத்தெருவில் ஒரு வீட்டில் குடி இருந்தோம். அது வாடகை வீடு என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அது எங்க வீடு. அவ்வளவு தான். எனக்கு ரெண்டு மூணு வயது தான் இருக்கும். இருந்தாலும் பசுமரத்தாணி போல சில காட்சிகள் என் மனத்தில் பதிந்து இருக்கின்றன.


‘மணலில் பதிந்த காலடிச் சுவடுகள் போல்

மனதில் கீறிய மந்திர நினைவுகள் - அவைகளை

எழுத்தில் இறக்கி வைக்க எத்தனிக்க

கழுத்தில் வந்து முக்குது சொற்கள்.’


அவ்வப்போது சில கவிதைகள் இப்படித்தான் முண்டிக் கொண்டு வருகின்றன. அவைகளைப் படிப்பது தவிர உங்களுக்கு வேறு வழி? சரி கதைக்குப் போவோம்.


புதுத்தெரு வீடு

முதலில் அந்த வீட்டைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.


சிறிய திண்ணைக்கு ஏற இரண்டு மூன்று படிகள். வீட்டின் இடது பக்கத்தில் ஒரு முருங்கை மரம். அந்த மரம், ஒரு குடும்ப உறுப்பினராகவே எங்களோடு வளர்ந்தது. பச்சைப்பசேலென்ற இலைகளுக்கு மத்தியில் வெள்ளே வெளேரென்ற முருங்கைப் பூக்களைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இரவில் வானம் பச்சையாக இருந்து, நட்சத்திரங்கள் வெண்மையாக ஒளிர்வதை வேண்டுமென்றால் உவமையாக வைத்துக்கொள்ளுங்கள்.


இங்கொன்றும் அங்கொன்றுமாக முருங்கைப் பிஞ்சுகள் தோன்றும். வால் நட்சத்திரம் போல. சில நாட்களில் காலை எழுந்து வந்துப் பார்த்தால், முருங்கை மரத்தைச் சுற்றி பூக்கள் உதிர்ந்து, ரம்மியமாக காட்சியளிக்கும். மண்ணில் விழுந்த மின்மினிகளாய். பக்கத்து வீட்டு பசுமாட்டை அதில் சில நாட்கள் கட்டி இருப்பார்கள். அது சாணி போட்டிருக்கும். அதன் கோமியம், தேடி வந்து, எங்கள் அம்மா போட்ட கோலத்தை கொஞ்சிக் கொண்டிருக்கும்.


முருங்கைக் காய்கள்

திடீரெனப் பார்த்தால் நீட்ட நீட்டமாக முருங்கைக் காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும். முடி வெட்டாத சாமியார்கள் போல. சில நேரம், வெறும் முருங்கைக் காய்கள் மட்டும் தொங்குவதைப் பார்த்திருக்கிறேன். அது சிறு கிளைகளா? அல்லது வெறும் காய்களா? எனக் குழப்பம் வரும் அளவுக்கு அத்தனை முருங்கைக் காய்கள்.


அந்த மரத்தில் ஒருவித பிசின் வரும். அதை எடுத்து நாங்கள் விளையாடுவோம். ஏழைகளின் கோந்து அது. எப்பொழுது என்று தெரியாது, சில மாதங்களில் கம்பளிப் பூச்சிகள் இருக்கும். அம்மா எச்சரிக்கை செய்வார்கள் என நினைக்கிறேன். மரத்தின் தண்டு துளி கூடத் தெரியாத அளவுக்கு, படர்ந்து ஒட்டி இருக்கும். தொட்டால் அரிப்பு தாங்க முடியாது என்பதால் கவனமாக இருந்திருப்போம் என நினைக்கிறேன்.


காய்த்திருக்கும் முருங்கைக் காய்களைப் பறித்து அக்கம்பக்கத்தாருக்கு ஆஞா கொடுத்திருப்பார்கள். சுயநலம் குறைவாக இருந்த காலம்.


திண்ணை

சரி! முருங்கை மரத்தைக் கடந்து வீட்டிற்குள் ஏறுவோம். வலது பக்கம் சிறிய திண்ணை. இடது பக்கம் பெரிய திண்ணை. இங்கு உட்கார்ந்து தான், அக்காக்கள், கல்லாங்காய் விளையாடுவார்கள். இரண்டு திண்ணைகளுக்கு இடையே நடைபாதை. நடைபாதை கதவில் முடியும். கதவின் இருமருங்கிலும் சிறு விளக்கு மாடங்கள் இருக்கும். சாயந்திரம் ஆனதும் அம்மா எண்ணெய் விளக்கேற்றி அந்த மாடங்களில் வைப்பார்கள். எண்ணெய் இருக்கும் வரை, இரவாகும் வரை எரிந்து முடியும். மாலையானதும், ‘விளக்கேத்தியாச்சு, விளையாடுறத நிறுத்திட்டு வந்த படிங்க’ ன்னு அம்மா சொல்றது வழக்கம். விளக்குகள் எரிந்து, எரிந்து, மாடத்தின் மேல்புறம் புகை அப்பி கருமையாக இருக்கும். சில நேரம், அவசரத்தில் விரலில் தண்ணியை தொட்டு, விளக்கு மையில் தடவி, நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.


‘அஞ்சு காசு மூஞ்சி’ வாத்தியார் வீடு

புதுத்தெருவின் கோடியில் போய் இடது பக்கம் திரும்பினால் ‘அஞ்சு காசு மூஞ்சி’ வாத்தியார் வீடு. (இவரைப் பற்றித் தனியாக ஒரு அத்தியாயம் எழுத வேண்டும்.) அந்தக் காலத்தில், 1960களில், ஒத்தக் காசும், அஞ்சு காசும் சதுரமாக இருக்கும். இரண்டு காசும், பத்துக் காசும் வட்டமாக ஆனால் ஒரங்கள் வளைவு வளைவாக இருக்கும். இருபத்தைந்து காசு ( காலணா ) ஐம்பது காசு (எட்டணா) ஒத்த ரூபா எல்லாம் வட்டமாக, ஆனால் ஓரங்கள் சீராக இருக்கும். அந்த வாத்தியார் முகம் சதுரமாக இருப்பதால் ‘அஞ்சு காசு மூஞ்சி’ வாத்தியார் எனப் பெயர் வந்திருக்கும் என நினைக்கிறேன்.


அந்த வாத்தியார் மற்றும் ஆஞாவின் நண்பர்கள், சிறிய திண்ணையிலும் பெரிய திண்ணையிலும், எதிரெதிரே உட்கார்ந்து நியாயம் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். ஓட்டு வீடு என்பதால், திண்ணையில் மரத்தூண்கள் இருக்கும். அவைகளைப் பிடித்து சுற்றி விளையாடுவது எங்களுக்குப் பொழுது போக்கு.


நடைபாதை

இரண்டு திண்ணைகளுக்கும் இடையே உள்ள நடைபாதை சற்று ஏந்தலாக இருக்கும். தெருவிலிருந்து படிகள் மேல் ஏறி, திண்ணையைக் கடக்க, ஏறு முகமாகத்தான் போக வேண்டும். தெருவின் உயரத்திலிருந்து நன்கு உயரமாக வீட்டைக் கட்டியிருப்பதால் அந்த ஏறுமுகம். சிறு பிள்ளையாய் இருக்கும் போது இருக்கும் நீள, அகல, உயர, தூர, அளவைகளுக்கும், வளர்ந்த பிறகு இருக்கும் அளவைகளுக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது?


சில நேரம், நாய்கள் நடைபாதையில் படுத்துக் கிடக்கும். அதை மிதிக்காமல் நடக்க வேண்டும். அல்லது ஓட வேண்டும். சில முறை அதன் வாலையோ, உடம்பின் மற்ற பாகங்களில் ஒன்றையோ தெரியாமல் மிதித்து விட்டால், நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் நாய் திடீரென ‘வீல்’ எனக் கத்திக் கொண்டு தலை தெறிக்க ஒடும்.


எதிர்த்த வீடு ‘வேம்பு’ வீடு. வேம்பு என்கிற அக்கா வீடு. அது நாய்கடி பட்டு, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தருகே (அங்கு தான் ஆஞா எழுத்தராக வேலைப் பார்த்தார்கள்.) உள்ள சுகாதார மையத்திற்குப் போய் தொப்புளைச் சுற்றி ஊசி போட்ட ஞாபகம்.


ஒத்த கதவு


சரி! தெருவிலும் திண்ணையிலும் நீண்ட நேரம் இருந்து விட்டோம். வீட்டின் உள்ளே போவோமா! திண்ணைச் சறுக்கலில் ஏறினால் நிலைக்கதவு. மூன்று பட்டைகள் கொண்ட ஒத்த கதவு. அதன் கைப்பிடி இரும்பிலான பெரிய வளைவு. கீழ்க்கட்டையில் ஏறி அந்த வளைவைப் பிடித்துக் கொண்டு, முன்னும் பின்னும் ஆட வசதியாக இருக்கும். ‘டுர்ர்ர்ர்’ என பஸ் சத்தம் போட்டுக்கொண்டு ‘சொய்ங்ங்ங்…’ எனப் போகும் பயணம் ஆனந்த பயணம்.

ஆனால் அதை அம்மா கவனிக்காத போது ஆடனும். அம்மா பார்த்தால்

‘ தம்பி! கதவ புடிச்சி ஆடாத….எறங்கு. தரித்திரம் புடிச்சிடும். குடும்பத்துக்கு ஆகாது’ என அடுக்களையிலிருந்து சத்தம் போடுவார்கள். பல நம்பிக்கைகள்! அதற்குள் பல அறிவியல் நிறைய இருக்கும் நம்பிக்கைகள். கதவு தானே வீட்டிற்குப் பாதுகாப்பு. கதவு உடைந்தாலோ, கதவின் நாதாங்கி உடைந்தாலோ பாதுகாப்புக்கு ஆபத்து தானே! விளையாட்டு வினையாகிவிட்டால் என்ன ஆவது? அம்மா அதற்காகத் தான் சத்தம் போட்டிருக்கிறார்கள்.


இருந்தாலும் அம்மா சொன்ன முதல் தடவையே இறங்கினது கிடையாது. ஊஞ்சலில் ஆடுவது போன்ற அனுபவம். அதற்கேற்ற பின்புல இசையும், எண்ணெய் பார்க்காத கதவின் நாதாங்கியிலிருந்து வரும். இசையோடு அசைவும் இருக்கும் சுகத்தை எப்படி இழப்பது? நாலைந்து தடவைச் சொன்ன பிறகு, அம்மா எதையோ கையில் எடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கும் போது இறங்கி, திண்ணை இடையேயான பாதையில் ஓட வேண்டும். அப்படிப்பட்ட நேரங்களில் தான் ‘நாய் வால்’ கவனம் தேவை. சில நேரம் கண்ணு மண்ணு தெரியாமல் ஓடி, முருங்கை மரத்தின் கீழ் பசு மாடு போட்டிருந்த சாணியில் ஒட்டிக்கொண்டு ஓடின சம்பவங்களும் உண்டு.


கதவைத் தாண்டி உள்ளேப் போனால் சிறிய நடைபாதை. வலப்பக்கம் ஒரு அறை. இந்தக் காலமாக இருந்தால் அங்கே செருப்பு, குடை போன்றவைகளை வைக்க தோதுவாக இருக்கும் இடம். ஆனால், அப்பொழுதெல்லாம் பள்ளிக்குச் செல்லும் அக்காக்கள் உட்பட, காலில் செருப்பு போட்டிருந்ததாக ஞாபகம் இல்லை. அந்த இடம் சற்று வெளிச்சம் குறைவாக இருட்டாக இருக்கும். ஒளிந்து பிடித்து விளையாடும் போது, கதவிடுக்கில் ஒளிந்துக் கொள்ள வசதியாக இருக்கும்.


முற்றம்


அந்தச் சிறிய உள் நடைபாதையைக் கடந்து வந்தால் கூடம். கூடம் சதுரமாக இருக்கும். நடுவே முத்தம் இருக்கும். முற்றம் என்பதின் பழகு தமிழ் சொலவடை முத்தம். வீட்டின் உயரத்திலிருந்து ஒரு அடி பள்ளமாக இருக்கும். மேலே ஓடு இருக்காது. சுத்துக்கட்டு வீட்டின் ஓடுகள் முற்றத்தின் மேலே, சதுரமாக முடிந்து இருக்கும். அதனால் முத்தத்திலிருந்து மேலே வானத்தைப் பார்க்கலாம். வெயில் அடிக்கும் போது நல்ல வெயில் அடிக்கும். வற்றல் போன்றவற்றை காய வைத்துக் கொள்ளலாம். மழை பெய்யும் போது ‘ச்சோ’ வென்று வீட்டின் உள்ளே மழை பெய்யும். தண்ணீரைப் பிடித்துக் கொள்ளலாம். காகிதக் கப்பல் செய்து விளையாடலாம். காற்று உள்ளே வந்து வெளியே போகும்.


பாருங்க!.


வெயில், மழை, காற்று, வெளிச்சம். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை. என் தமிழ் முன்னோர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இப்படிப்பட்ட இயற்கையோடு இயையந்த வீடுகளைக் கட்டும் முறையைக் கண்டுபிடித்து அடுத்த தலைமுறைக்கு கொடுத்ததற்கு.


சில நேரம், மழை பெய்யும் போது, அக்காக்களும் நானும் மழையில் நனைந்துக்கொண்டே முற்றத்தில் விளையாடி இருக்கிறோம். முத்தத்தின் நடுவில் ஒரு அடிபம்பு இருக்கும். ஒரு பக்கம் கேள்விக்குறி போல் தொங்குகிற கம்பியைப் பிடித்து அடிக்க, எதிர் முனையில் ‘பொல, பொல’ ன்னு நீர் ஊற்றும். மழை இல்லாத போது அதில் நீரை அடித்து குடத்தில் பிடித்துக் கொள்ளலாம். பத்தாதற்கு வீட்டின் பின்புறம் கேணியும், தோட்டத்தின் முடிவில், வருடத்தில் பத்து பதினோரு மாதங்களுக்கு நீரோடு ஓடும் வாய்க்காலும் இருந்தது. மழையும் ஏய்க்காமல் முறையாகப் பெய்தது. தண்ணீருக்குப் பஞ்சமில்லை.

அந்த முற்றத்தைச் சுற்றி கூடம். காற்றோட்டமாக, வெளிச்சமாக. அங்கு தான் நாங்கள் நிறைய நேரம் இருப்போம். அக்காக்கள் படிக்கிற இடம். எல்லோரும் சாப்பிடுகிற இடம். விருந்தினர்கள் வந்தால் உட்கார்ந்து பேசுகிற இடமும் அது தான். சுவற்றில் இரண்டு இடங்களில் சுவற்றோடு ஒட்டிய அலமாராக்கள் இருக்கும். அந்த அலமாராக்காளில் சாமிப் படங்களும், சில பேப்பர்களும், கண்டதும் கடையதும் இருக்கும்.


அறை

நிலைக்கதவைத் தாண்டியதும் ஒரு நடைபாதை இருக்கும் என்று சொன்னேனா! அதைத் தாண்டி கூடத்திற்குள் பிரவேசிக்கும் போது, கூடத்தில் வலது பக்கம் போனால் ஓர் அறை. அதற்கானக் கதவு. அதில் துணிமணிகள் உட்பட ஒரு மர பீரோ இருக்கும். அந்த பீரோ ரொம்பவும் பிரசித்திப் பெற்றது. இது அம்மா வழித்தாத்தா, மன்னார்குடி சவரிமுத்து ஐயா அவர்களின் வீட்டிலிருந்து அம்மாவிக்கு வந்த சீதனம்.


மேலே இரண்டு அடுக்குகள் கொண்டதும், கீழே இரண்டு அடுக்குகள் கொண்டதுமாகவும், இரண்டுக்கும் நடுவே இரண்டு டிராயர்கள் உள்ளதுமாகவும் இருக்கும். உயர்ரக தேக்கு மரத்தில், நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய வசதியான பீரோ. சிறப்பாக மேல் அடுக்கில் சிறிய சிறிய அறைகள் ஏழெட்டு இருக்கும். அந்த பீரோவில் தான் எல்லோருடைய (கிட்டத்தட்ட ஆறு பேருடைய) நல்ல துணிகளும் இருக்கும். ‘கொடி’ என்று அறையின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு கட்டப்பட்டிருக்கும் கயிற்றில், அன்றாடம் பயன்படுத்துகிற துணிகள் தொங்கும்.


அடுக்களை


கூடத்தைத் தாண்டி அடுக்களை. அடுக்களைக்குக் போகும் வழியில் அம்மியும், கொடக்கல்லும் (குடக்கல்) இருக்கும். கூடவே உரலும், உரலைக் குத்துகிற உலக்கையும் இருக்கும். அடுக்களை. அம்மா. கரித்துணி. பாத்திரங்கள். சமையல் சாமான்கள்.


இவைகளைத் தாண்டி கொல்லைக் கதவு. கொல்லைக்கதவிலிருந்து இறங்க படிகள். உடனே சகடை மாட்டிய கிணறு. சகடை என்பது இரும்பில் வட்ட வடிவமாக இருக்கும். கேணித் தூண்களில் மேலே இருக்கும் கட்டையின் மத்தியில் பொருத்தப்பட்டிருக்கும். அதனூடே தான் கயிறை விட்டு, வாளியில் நீரை அள்ள வேண்டி இருக்கும். அடிக்கடி எண்ணெய் போட வேண்டும். இல்லையென்றால் ஏழூருக்கு கேட்கும் சகடை சத்தம். கிணற்றைச் சுற்றி நடக்க மேடை.


கொல்லை


அந்தக் கொல்லையில் பத்து பதினைந்து தென்னை மரங்கள். வேறு என்னென்ன மரங்கள் இருந்தன என்று ஞாபகம் இல்லை. தென்னை மரங்களைத் தாண்டி நடந்தால் காட்டா மணக்குச் செடிகளுக்குப் பிறகு நான் முன்பேச் சொன்ன வாய்க்கால்.


குடமுருட்டி ஆறிலிருந்து பிரிந்து வரும் வாய்க்கால். அங்கே நின்று வீட்டைத் திரும்பிப் பார்த்தால், நாட்டு ஓடுகள் வேய்ந்த எங்கள் வீடு கம்பீரமாகக் காட்சியளிக்கும். மாயவரத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு ஞாபகம் இருக்கிற முதல் வீடு வலங்கைமான் புதுத் தெருவில் இருந்த இந்த மாயா ஜால வீடு தான்.


‘செங்கல், மணல், ஓடு அல்ல வீடு

எங்கள் பாசம், அன்பு இதற்கு ஏது ஈடு?

தங்க மட்டும் கட்டவில்லை வீடு

தங்க நிகர் அனுபவமே தேடு’


அப்படிப்பட்ட வீட்டில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை தொடர்ந்து சொல்ல இருக்கிறேன்.**********

Picture Courtesy:

  1. https://www.travelticketguide.com/

  2. https://www.facebook.com/lifeguard.myzija/

  3. http://sureshmaniyan.blogspot.com/2017/07/blog-post.html

  4. https://www.facebook.com/182899585590066/posts/656656121547741/

  5. http://veeramangudi.blogspot.com/p/blog-page_55.html

  6. http://sivamgss.blogspot.com/2013/04/blog-post_3.html

  7. https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani

38 views0 comments

Recent Posts

See All

4. ஜார்ஜ் சின்னாஞா கல்யாணம்

புதுத்தெரு வீட்டில் இன்னொரு முக்கிய நிகழ்வு நடந்தது. அது தான் ஜார்ஜ் சின்னாஞாவின் கல்யாணம். எங்கள் ஆஞாவுக்கு ஐந்து சகோதரிகள். ஆனால் ஒரே ஒரு சகோதரர் தான். ஐந்து சகோதரிகளின் பெயர்கள் பின்வருமாறு. மேரி,

Comments


bottom of page