top of page

4. ஜார்ஜ் சின்னாஞா கல்யாணம்

புதுத்தெரு வீட்டில் இன்னொரு முக்கிய நிகழ்வு நடந்தது. அது தான் ஜார்ஜ் சின்னாஞாவின் கல்யாணம்.


எங்கள் ஆஞாவுக்கு ஐந்து சகோதரிகள். ஆனால் ஒரே ஒரு சகோதரர் தான். ஐந்து சகோதரிகளின் பெயர்கள் பின்வருமாறு. மேரி, தெரசா, ரோசாலி, தவமரி, அந்தோணியம்மாள் என்கிற பாப்பாயி. கடைசி பெண்பிள்ளையாக இருந்ததால் பாப்பாவும் ஆயி’யும் இணைந்து செல்லமாக பாப்பாயி எனக் கூப்பிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.


ஜார்ஜ் சின்னாஞா

சகோதரரின் பெயர் ஜார்ஜ். இவர்களைப் பற்றி எல்லாம் பின்னால் விபரமாகச் சொல்கிறேன். இப்பொழுது ஆஞாவின் அன்புத் தம்பியான ஜார்ஜ் அவர்களின் திருமணம்.


அப்பொழுதெல்லாம் கல்யாண மண்டபங்கள் என்று தனியாகக் கட்டி வாடகைக்கு விடுவதில்லை. எல்லோர் திருமணங்களும் அவரவர் வீட்டிலோ, கோயிலிலோ தான் நடக்கும். ஏன்? என் கல்யாணம் 1983-ல் நடந்தது. அது கூட எங்கள் தஞ்சாவூர் அருளானந்த நகர், ஆறாவது குறுக்குத் தெருவில் இருக்கிற 17/H வீட்டில் தான் நடந்தது. உலகமயமாதலுக்கு விதை போட்ட சமயம். ஆனால் இன்னும் முளைக்காத தருணம் என நினைக்கிறேன்.


சரி! ஜார்ஜ் சின்னஞா கல்யாணத்திற்கு வருவோம்.


பந்தல்

வீட்டின் முன்னே தெருவில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. சின்னாஞாவும், சின்னம்மாவும் மாலை மாற்றிக் கொண்டது வெளியில் உள்ள பந்தலில் வைத்துத்தான். திருமணம் கும்பகோணம் கோவிலில் நடந்திருக்க வேண்டும். பந்தலின் ஒரு பக்கம் முருங்கை மரம். இன்னொரு பக்கம் துணி வெளுப்பவர் வீடு.


சின்னம்மாவின் பெயர் பிலோமினாள் மேரி. அவர்களுக்குச் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம். அப்பொழுதே ஆசிரியப் பணிக்குப் படித்திருந்தார்கள். அவர்கள் அக்காலத்திய தமிழ் சினிமா நடிகை போன்று அழகாக இருப்பார்கள். அவர்களது ஸ்டைலான சிகை அலங்காரம் உறவினர்கள் மத்தியில் பிரசித்திப் பெற்றது.


வசீகரம்

அவர்களுடைய பெயர் பிலோமினாள் அல்லவா! ஃபிலோ என்றால் கிரேக்க மொழியில் அன்பு என்று அர்த்தம். அது போலவே சின்னாஞாவும் சின்னம்மாவும் அன்புக்குரிய காதலர்களாகவே என் கண்களுக்குத் தெரியும்.


ஜார்ஜ் சின்னாஞாவும் வசீகர முகம் கொண்டவர். பார்த்தாலே அனைவரும் பரவசம் அடையக்கூடிய முகவெட்டு. அவர் பேசினால் போதும் யாரும் மடங்கி விடுவார்கள். அவர் சிரித்துக் கொண்டே பேசினால் அவ்வளவு தான் அவருக்கு அடிமையாகி விட வேண்டியது தான்.


பின்னாளில் என் ஆஞா சொல்லக் கேட்டது.


ஜார்ஜ் சின்னாஞா ஆஞாவிடம் வந்து,


“அண்ணே! நம்ம சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்குண்ண.”

“எந்த ஊரு?”

“மடப்புரம்.”

“திருத்துறைப்பூண்டி மடப்புரமா?”

“ஆமா.”


மதுரை மாவட்டம், கீழடி அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் ஆஞாவுடைய முன்னோர்கள் கோவில் கர்த்தாக்களாக இருந்தார்கள். ஆஞா குடும்பம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்களம் அருகே உள்ள கானூரில் குடியிருந்த போது, மடப்புரம் காளி கோவிலிலிருந்து வந்து, அக்கோயிலின் செப்புத்தகடுகளில் சொல்லியவாறு, வரி வாய்தா வாங்கிச் சென்றிருக்கிறார்கள். இது எல்லாமே ஆஞா சொன்னது.


பூசாரிகள்

மடப்புரம் காளி கோவிலின் அருகே உள்ள திருபுவனம் என்கிற ஊரிலிருந்து ஆஞாவின் முன்னோர்கள் பஞ்சம் பிழைக்க 1800-களில் வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டம் நோக்கி வந்துள்ளனர். தஞ்சை நகரத்தருகே ஒரத்தநாட்டில் தங்கியுள்ளனர். சில குடும்பங்கள் மாத்திரம் திருத்துறைப்பூண்டி சென்றிருக்கின்றனர். இது எல்லாம் ஆஞா சொன்னது.


மதுரை மடப்புரம் காளி கோயிலை நினைவு கூறும் வண்ணம், இவர்கள் தங்கிய ஊரை ஒட்டிய புதிய பகுதியை ‘மடப்புரம்’ என்று அவர்களே பெயர் சூட்டியிருக்கக் கூடும் என் நான் அனுமானிக்கிறேன்.


எங்கள் ஆஞா ‘நிறைவுள்ள நினைவலைகள்’ என்று அவரது 93 வது வயதில் 2018ம் ஆண்டு, அவருடைய சுயசரிதையை எழுதி வெளியிட்ட போது, அருளானந்தம்மாள் (104 வயசு ஆச்சி) அவர்களின் பேரனும், தவமரி அத்தை அவர்களின் மகன் டேவிஸ் உடனும், மற்றும் எங்கள் ஆச்சியின் தங்கையின் பேரனும், சுப்ரியன் சித்தப்பா அவர்களின் மகன் அருள்நெறி உடனும், மதுரை திருபுவனம் அருகே உள்ள மடப்புரம் கோவிலுக்குச் சென்றேன். அதைப் பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன். ஒரே ஒரு குறிப்பு. அந்தக் கோயிலில் பிராமணர்கள் பூசாரிகளாக இன்று வரை இல்லை. எங்கள் சொந்தக்காரர்களே பூசாரிகளாக இருக்கின்றனர்.


மடப்புரம்

இப்பொழுது ஆஞாவுக்கும் சின்னாஞாவுக்கும் இடையே நடந்த உரையாடலைத் தொடர்வோம்.


“திருத்துறைப்பூண்டி மடப்புரமா?”

“ஆமா.”

“பொண்ணு என்ன படிச்சிருக்கு?”

“டீச்சருக்கு படிச்சிருக்கு.”

“அப்படியா? அப்ப ஐயா’கிட்ட (ஆஞாவின் ஆஞாவை, எங்கள் தாத்தாவை, ஊரார் ‘ஐயா’ என்று அழைத்ததால், பிள்ளைகளும் ‘ஐயா’ என்றே அழைத்தனர்) சொல்லனும்.”

“நீ தான் சொல்லனுண்ண.”


(குடும்பப் பெரியவர்களுக்கு மரியாதை குறையாத காலம்!!)


“சரி! செலவுக்கு…”

“என்னுட்ட ரூ 900/- இருக்கு. வச்சுக்க. எப்படியாவது கல்யாணத்தை முடி.”

“ரூ 900 ஆ? என்னுட்டயும் அதிகம் பணம் இல்ல. பரவாயில்லை. சமாளிப்போம்.”


(ஆஞா, தன்னோடு வேலை பார்த்த நண்பர்களின் உதவியோடு கல்யாணச் செலவை முடித்ததாக என்னிடம் சொன்னார்கள். நிச்சயம் இன்னும் ஒரு 200 அல்லது 300 கூடப்போட்டு திருமணத்தை முடித்திருப்பார்கள். கிட்டத்தட்ட ரூ 1500க்குள் ஒரு திருமணம்.)


சின்னாஞாவே பிறகு என்னிடம் சொன்னது பின்வருமாறு.


தாலி

“தம்பி! தாலி வாங்க கூட காசில்லப்பா. அவ்வளவு ஏழ்மை. கல்யாணத்துக்குப் பிறகு நானே என் சொந்த சம்பாத்தியத்துல தங்கத்துல தாலி செஞ்சி போட்டேன். கல்யாணத்தன்னக்கி எப்படியோ சமாளிச்சிட்டோம்.”


ஏழ்மையாக இருந்த போதும், தனக்குப் பிடித்த பெண்ணை திருமணம் முடித்திருக்கிறார். அதுவும் குடும்பத்தின் ஆதரவுடன் செய்திருக்கிறார். குடும்ப கௌரவத்தையும் காப்பாற்றி, நினைத்ததை முடிக்கும் சாதனை வீரனாக ஜார்ஜ் சின்னாஞா இருந்திருக்கிறார். ஒரு பிரச்னையை எப்படி லாவகமாக எதிர்கொள்வது என்றும், விரும்பிய இலக்கை இடைவது என்றும் சின்னாஞாவிடம் கற்றுக் கொள்ளலாம்.


“கல்யாணத்தை எங்க வச்சுக்கலாம்?”

“நீயே சொல்லுண்ணா”

“இங்கயே என் வீட்டுலயே வச்சுக்கலாமா?”

“சரிண்ணா.”

“சாப்பாடு எதிர்த்த வேம்பு வீட்டுல வச்சு போட்டுக்கலாம். அது கொஞ்சம் அகலமா இருக்கும்.”

“சரிண்ணா.”

“கும்பகோணம் கோவில் ஃபாதரைப் பாத்து ஓலை வாசிக்கச் சொல்லிடலாம். ஐயா’வைப் பாத்து நான் பேசிடறேன்.”

“சரிண்ணா.”


இப்படித்தான் ஜார்ஜ் சின்னாஞாவின் திருமணம் வலங்கைமான் புதுத்தெரு வீட்டில் நடந்தது.


தோரணம்

தென்னை கீற்றினால் ஆன எளிய பந்தல். இரு பக்கங்களிலும் வழி கொண்ட பந்தல். மேலே வேட்டிகளை நார்த்தை முள் கொண்டு அழகாக குத்தி அலங்கரித்திருந்தார்கள். குண்டூசி அதிகம் புழக்கத்தில் இல்லாத காலம். ஜிகினா பேப்பர்களைக் கொண்டு அலங்காரம் இல்லை.


அப்பொழுது தான் பறித்திருந்து மஞ்சள் நிற இளம் தென்னை ஓலைகளைக் கொண்டு தோரணம் கட்டியிருந்தார்கள். தோரணம் செய்வது ஒரு கலை. ஓர் அழகு. சாதாரண தென்னை ஓலையை கலைநயமிக்க தோரணமாக மாற்றுவது நிச்சயம் ஓர் அழகு தான். தென்னை மட்டையில் ஒரு ஓலையை மட்டும் பிய்த்துக் கொள்ள வேண்டும். நடுவில் முதுகுத் தண்டு இருக்கும். மட்டையிலில் ஒட்டிக் கொண்டிருந்து பிய்த்த பகுதியை தலை என்றும், ஓலையின் மெல்லிய முடிவுப் பகுதியை வால் என்றும் வைத்துக்கொள்வோம். நடு முதுகுலிருந்து இரண்டு பக்கமும் ஒலை இருக்கும்


தலைப்பகுதியில் இரண்டு பக்கமும் உள்ள ஓலை ஒட்டியிருக்கும். அந்த ஒட்டிய பகுதியிலிருந்து இரண்டு இன்ச் விட்டு வெட்டிக்கொள்ள வேண்டும். இப்பொழுது இரண்டு பக்க ஓலைகளும் பிரிந்து விடும்.


வெட்டு

தலைப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு ஜான் அளவில், கீற வேண்டும். ஓலையின் ஓரத்திலிருந்து நடு முதுகு வரை வெட்டி, பிறகு தொடர்ந்து முதுகை ஒட்டி, இரண்டு இன்ச் அளவிற்கு வெட்ட வேண்டும். இவ்வாறு இரண்டு பக்கமும் வெட்ட வேண்டும். ஓரத்திலிருந்து நடு முதுகு வரை வெட்டும் போது சாய்வாக, 45 பாகை அளவில் வெட்ட வேண்டும். இது முதல் வெட்டு.


இந்த முதல் வெட்டிலிருந்து ஆறு ஏழு விரக்கடை தாண்டி இரண்டாவது வெட்டு. இரண்டாவது வெட்டிலிருந்து ஆறு ஏழு விரக்கடை தாண்டி மூன்றாவது வெட்டு. ஓலையின் நீட்டத்திற்கு ஏற்றாற் போல மூணோ அல்லது ஐந்தோ வெட்டுகள் வெட்டலாம்.


முதல் வெட்டில் வலது பக்கம் உள்ள ஓலையை பின்புறமாக மடித்து, இடது பக்கம் செருக வேண்டும். இடது பக்கம் உள்ள ஓலையை அதேப்போல பின்புறமாக மடித்து, வலது பக்கம் செருக வேண்டும். இப்படியே இரண்டாவது மற்றும் மூன்றாவது வெட்டுகளிலும் மடிக்க வேண்டும்.


தோரணம் கட்டுவதற்கு ஆயத்தம். பிறகு கட்டும் போது, வால் பகுதியை கயிற்றில் சுருக்குப் போட்டு, தலை கீழே இருக்குமாறு கட்ட வேண்டும். தமிழர்களின் அழகிய கண்டுபிடிப்பு. இயற்கையும் இவர்களின் கற்பனை மற்றும் படைப்புத்திறனும் சேர்ந்த அழகிய கண்டுபிடிப்பு.


அப்பாடா!!! ஒரு வழியாக தோரணத்தை விளக்கிச் சொல்ல முற்பட்டேன். செய்து பார்த்தால் தான் புரியும் என நினைக்கிறேன்.


சின்னாஞா கல்யாணத்திற்கு வருவோம்.


குஸ்கா

தரையில் பட்டை பட்டையாக சிவப்பு பச்சை நிறத்தில் இருந்த ஜமுக்காளம் என்ற பெரிய விரிப்பு. இரும்பு நாற்காலிகள் கிடையாது. பொண்ணு மாப்பிள்ளைக்கு மாத்திரம் ஒரு மரத்தாலான பெஞ்ச். மற்றவர்கள் கீழே தரையில் தான் அமர்ந்திருந்தார்கள். வீட்டின் பின்புறம், தென்னந்தோப்பில் மூன்று பெரிய கற்களை வைத்து, அங்கு உள்ள தென்னை மட்டைகளை எரித்து சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது.


பின்னாளில் ஜார்ஜ் சின்னாஞா என்னிடம் சொன்னது.


“என்னடாம்பி (என்னடா தம்பி - யின் சுருக்கம்)… வாடா!”

“என்னஞா” (என்ன ஆஞா -வின் சுருக்கம். அவர்கள் சின்னாஞா என்றாலும் ஆஞா என்றே அழைப்பேன்.)

“வா..வா..வா…வா…வா….வா…உட்காரு” (எப்பொழுதும் உற்சாகமாகத்தான் வரவேற்பார்கள்.)


சில உரையாடல்களுக்குப் பிறகு,


“ஒங்க கல்யாணம் வலங்கைமான்ல நடந்தது எனக்கு லேசா ஞாபகம் இருக்கஞா.”

“இல்டாம்பி (இல்லடா தம்பி) என் கல்யாணத்துல பாய் ஒருத்தரு குஸ்கா சோறு செஞ்சாரு. அது ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு’ன்னு எல்லாரும் கேட்டு, கேட்டு வாங்கி சாப்பிட்டாங்க. அந்த வாசம் அப்படியே இருக்குடாம்பி….”


நெருங்கிய சொந்தங்களை மட்டுமே வைத்து

தேவைப்பட்ட அலங்காரங்களை மட்டுமே வைத்து

படோபடமான ஆரவாரங்கள் இல்லாமல்

சுவையான உணவுடன்

கையை கடிக்கும் செலவுகள் இல்லாமல்

மகிழ்ச்சியாக திருமணம் முடிந்தது.


பள்ளியில் சேராமலேயே மூன்று வயதிலேயே பள்ளிக்குச் சென்ற கதை அடுத்தது.

*****

(தொடரும்…)

12 views0 comments

留言


bottom of page