உலகமும் மனித இனமும் அழியாமலிருக்க COP என்ன செய்கிறது?
Updated: Jul 2
மனிதகுலம் ஒரு குடும்பம். உலகம் நம் வீடு. நமது கூரையை நாமே எரிக்கலாமா? அப்படி செய்தால் நம் நிலைமை விபரீதம் ஆகிவிடுமல்லவா? ஆகவே, என்ன செய்தால் நம்மையும் நம் வீட்டையும் காப்பாற்றலாம் என யோசித்த போது தான் COP உருவானது. இப்பொழுது COP26 என்ற அதிமுக்கிய உலகளாவிய கூட்டம் அக்டோபர் 31லிருந்து நவம்பர் 12 வரை ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ளது.
COP: வரலாறு, பின்னணி, முக்கியத்துவம் என்ன?
காலநிலை மாற்றம் அல்லது சூழலியல் பிரச்னைகள் குறித்து, 1970களில் சூழலியலாளர்கள் பேசத் துவங்கினார்கள். எண்ணெய், நிலக்கரி, எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருளின் (Fossil Fuel) தீவிர பயன்பாட்டினாலும், தொழிற்புரட்சியின் நீட்சியில் உலகமயமாக்கலின் சிக்கலினாலும், நகரமயமாக்கம் மற்றும் தனியார்மயமாக்க நிலையினாலும், இயந்திரம் மற்றும் இணையவழி சந்தையினாலும், மனிதகுலம் தன் சுற்றுச் சூழலை அழித்துவருகிறது என்றும், வருகிற தலைமுறைக்கு எந்த விதத்திலும் வாழத் தகுதியற்ற உலகத்தையே வழங்க இருக்கிறோம் என்றும் கவலைப்பட்டார்கள். அதோடு, உலக நாடுகளின் தலைவர்கள் இதற்கு ஒரு நல்ல முடிவெடுக்கவில்லையென்றால் மனிதகுலமும், இந்த பூமியும் அழிந்துவிடும் என்று எச்சரித்தார்கள்.
அதன் விளைவாக, 1992ல் ரியோ டி ஜெனீரோ என்ற இடத்தில் Earth Summit என்ற பூமி உச்ச மாநாடு நடந்தது. அதன் முடிவுகளை 1994ல் 196 நாடுகள் ஆதரித்து கையெழுத்துப் போட்டன. United Nations Framework Convention on Climate Change (UNFCCC) என்கிற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு உருவானது. அந்த அமைப்பில், சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட பிரதிநிதிகள் இணைந்த உயர்மட்ட குழுவிற்குப் பெயர்தான் COP அதாவது Conference of the Parties என்று பெயர்.
COP நடந்து வந்த பாதை: சாதித்ததும், வழுக்கியதும்
மேற்கத்திய நாடுகளுக்கும் சோவியத் ரஷ்யாவுக்குமான பனிப்போர் முடிவடைந்த நிலையில், COP1 என்று, COPன் முதல் கூட்டம் 1995ல் அப்பொழுதுதான் இணைந்திருந்த மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்தது. அதன் பின்னர் நடந்த கூட்டங்களில் COP3 கூட்டம்தான் முக்கிய முதல் மைல்கல்லாக கருதப்படுகிறது. அது ஐப்பானின் கியோட்டோ நகரில் நடைபெற்றது. வளர்ந்த நாடுகள், தங்கள் கரியமிலவாயுவின் (Carbon-dioxide) அளவை 5% குறைக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதை கியோட்டோ ஒப்பந்தம் என அழைக்கிறார்கள். இதை ஒரு திருப்புமுனை எனலாம்.
கியோட்டோ ஒப்பந்தம் மிகமிகவும் தேவை என்று நாடுகள் ஒத்துக்கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டது. அதனால் 2005ம் வருடம் தான் அந்த முடிவில் 192 நாடுகள் கையெழுத்திட்டன. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள், அவரவர்கள் ஒத்துக்கொண்ட அளவுப்படி 2008லிருந்து 2012க்குள் குறைப்பதாக ஒத்துக்கொண்டன.
மறுபடி 2012ல் தோகாவில் நடைபெற்ற மாநாட்டில், கியோட்டோ ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, கரியமிலவாயுவை குறைக்க வேண்டிய காலகட்டத்தை 2013லிருந்து 2020 என மாற்றினார்கள். ஆனால் அந்த ஒப்பந்தம் இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை.
இந்த நிலையில் 2015ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடந்த COP21 கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு நடந்த கூட்டத்தின் முடிவுகளை பாரிஸ் ஒப்பந்தம் என்று அழைக்கின்றனர். அது மிக முக்கியமான ஒப்பந்தம். அதன்படி, அதில் கையெழுத்திட்ட 196 நாடுகளும் இணைந்து, பூமிப்பந்தின் வெப்ப அளவை 2 டிகிரிக்கும் குறைவாகவே வைக்க முயற்சிப்பது, முடிந்தால் 1.5 டிகிரி அளவுக்கு குறைப்பது என்று முடிவானது. குறிப்பாக இந்த வெப்ப அளவு, தொழிற்புரட்சி தொடங்கிய 18, 19ம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய வெப்ப அளவை ஒப்பிட்டு முடிவு செய்யப்பட்டது.
இதனை 2050க்குள் சாதித்துக் காட்டுவது என்றும், ஒவ்வொரு ஐந்து ஆண்டும், அனைத்து நாடுகளும் தங்கள் சாதனை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானம் செய்யப்பட்டது. அதன் அடைப்படியில் போன வருடம் கூடவேண்டிய கூட்டம், கோவிட் தொற்று காரணமாக, தள்ளிவைக்கப்பட்டு இந்த வருடம் பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தில் தான் ஒவ்வொரு நாடும் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பிக்க இருக்கிறது. ஆகவே ஞாயிறு துவங்கும் COP26 கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் காலநிலை மாற்றத்தால் வரப்போகிற ஆபத்துகளைத் தவிர்க்க என்னென்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள் என ஒவ்வொரு நாடும் அறிவிக்கும்.
COP26ல் நாட்டுத்தலைவர்கள் எடுக்கும் முடிவு எப்படி நம்மை பாதிக்கும்?
அதற்கு முதலில் காலநிலை மாற்றம் என்றால் என்ன என்று சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். பூமியில், குளிரும் சூடும் மாறி மாறி இருந்துக்கொண்டே இருக்கிறது. தட்பமும் வெப்பமும் சீராக இருந்தால் தான் பூமி சமநிலையில் இருக்கும். மனித உயிர்கள் வாழ வசதியாக இருக்கும். ஆனால், நமக்கு காய்ச்சல் வந்தால் உடல் சூடாவது போல, சமீபக்காலங்களில், பூமியின் சூடு அதிகரித்துக் கொண்டே போகிறது. தணியும் பாடில்லை. இப்படி சூடு அதிகரித்துக்கொண்டே போனால் மனிதகுலம் அழியும் ஆபத்து இருக்கிறது. இதைத்தான் காலநிலை மாற்றம் என்று குறிப்பிடுகிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், பூமியின் சூட்டிற்கு காரணமே, ஆறறிவு உள்ளவன் என்று தங்களையே மார்தட்டிக்கொள்கிற மனிதர்களின் நடவடிக்கையே காரணம் என்று அறிவயலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
புகை கக்கும் தொழிற்சாலைகள், வானுயரக்கட்டிடங்கள், வலம் வரும் வாகனங்கள் என தன் வாழ்க்கையை சொகுசாக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிற மனிதர்கள், அதற்காக செலவழிக்கிற எரிபொருளை எரிக்கும் போது வெளிப்படுகிற கரியமிலவாயு, சூரிய வெப்பத்தை காற்று மண்டலத்திலேயே பிடித்து வைப்பதால் நம் பூமி சூடாகிறது. மேலும் குப்பையில் தூக்கி எறியப்படும் உணவுலிருந்து மீதேன் வெளிப்பட்டு அதை மேலும் சூடாக்குகிறது. கரியமிலவாயுவை உறிஞ்சுகிற காடுகளை அழிப்பதாலும், நகரமயமாதல் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பாலும் அந்த சூடு இன்னும் சூடாகிறது. 19ம் நூற்றாண்டில் இருந்ததை விட 50% சதவீதம் கூடியிருக்கிறது என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இப்படி சூடாவதால், ஆர்க்டிக், அண்டார்க்டிக் பனிப்பாறைகள் உருகி, கடல்மட்டம் உயர்ந்து, கடற்கரை ஓரங்களில் வெள்ளம் ஏற்படவும், தீவுகள் மாயமாகவும் வழிவகுக்கிறது. வறட்சியும், புயல்களும், காட்டுத்தீகளும் உருவாகின்றன. இதைத் தடுக்க, நாட்டுத்தலைவர்கள் முடிவுகள் எடுப்பார்களா என்பதே கேள்வியாக இருக்கிறது.
அப்படி முடிவுகள் எடுக்கும் பட்சத்தில், நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும். பெட்ரோல், டீசல் கார்களைத் தவிர்த்து மின் கார்களை பயன்படுத்துவது, ரெட் மீட் என்கிற இறைச்சியை குறைத்து உண்பது, விமானப் பயணங்களைத் தவிர்ப்பது, தற்போதைய சமையல் எரிவாயு கொண்டு சமைக்காமல் மாற்று எரிவாயுக்கு மாறுவது என வாழ்க்கை முறை மாறலாம்.
எழுத உதவிய சாத்துணைகள்
1. https://unfccc.int/process-and-meetings/the-paris-agreement/the-paris-agreement
2. https://unfccc.int/kyoto_protocol
3. https://unfccc.int/process/bodies/supreme-bodies/conference-of-the-parties-cop
Pictures Courtesy
SBS Tamil Radio, Australia