உங்கள் கப்பலை நீங்களே கட்டுங்கள்
தேவையான பொருட்கள்: சதுரமான தாள் அல்லது அட்டை, தண்ணீர்
செய்முறை: நான்கு பக்கமும் சம அளவுள்ள சதுர பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அதை சரிபாதியாக மடியுங்கள். ஒரு சதுரம் கிடைக்கிறதா? அதனை மீண்டும் சரிபாதியாக மடியுங்கள். இப்பொழுது நாலில் ஒரு பகுதியாக ஒரு சின்ன சதுரம் கிடைக்கும்.
இதில் விரிந்த நிலையில் ஒரு மூலை வரும். அதன் ஒரு மூலையை எடுத்து ஒரு பக்கத்தை வெளிப்புறமாக மடியுங்கள். அப்பொழுது ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும். அதே போல எதிர் பக்கமும் வெளிப்புறத்தை முக்கோணம் வருவது போல மடியுங்கள்.
மடிப்பு பகுதி இரண்டையும் விட்டுவிட்டு, அடியின் மூலைகளை அமுக்கிப் பிடித்தால் படகு போன்று விரியும். அதன் கீழ்ப்பகுதியை சமமாக சரி செய்தால் கப்பல் தயார். அதிலே கத்திக் கப்பலும் செய்யலாம்.
விளையாட்டு: மழை பெய்கிறதா? வீட்டிலோ, சாலையிலோ தண்ணீர் ஓடுகிறதா? அதில் உங்கள் கப்பலை விடுங்கள். ‘ஊ...’ என்ற ஒலியை நீங்கள் கொடுங்கள். கப்பல் புறப்படும். கற்பனையில் கடல் தாண்டி பயணியுங்கள்.
கூடுதல் விளக்கம்:
இலையில் கப்பல்
தாள் இல்லையென்றால் மர இலையில் கப்பல் செய்யலாம். காம்பை மடித்து இலையில் செருகலாம். காட்டாமணிச் செடியில் உள்ள பொம்மைக் காயை கப்பலில் ஆட்கள் போல் அமரச் செய்யலாம். ஆடாதொடை இலை நீண்டு இருக்கும். அதில் கப்பல் செய்வார்கள்.
வாழைமட்டையில் கப்பல்
வாழை மட்டையை உரித்து, காய வைத்து, அதிலும் விளக்கமாறு குச்சியை வைத்து, கப்பல் செய்யலாம். கப்பல் செய்யும் போது வாழை மட்டையை செருப்பு போல பயன்படுத்தலாம்.
நாணல்/தக்கையில் கப்பல்
நாணல் அல்லது தக்கையிலும் கப்பல் செய்யலாம். எது எது மிதக்குமோ அதிலெல்லாம் கப்பல் செய்து விளையாடலாம்.
விளையாட்டில் கற்றல்
கப்பல் போலவே தாளில் பல உருவங்கள் செய்யலாம். வாழை மட்டையில், பனை மட்டையில், தென்னை மட்டையில் குழந்தைகளை விளையாட விடவேண்டும். படைப்புத்திறன் தானாக வளரும்.
குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுக்கவேண்டும். கண்காணிப்பு இருக்க வேண்டும்.
கப்பல் வரலாறு
சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் காலத்தில் கப்பல் பயணத்திற்கு, வணிகத்திற்கு, போருக்கு பயன்பட்டது. இரண்டு மூன்று மரங்களைக் கட்டி கட்டுமரம் செய்தார்கள். உள்நாட்டில் பரிசல் செய்து பயன்படுத்தினார்கள். பிறகு பாய்மரக்கப்பல் கட்டி, காற்றின் பயனை உபயோகப்படுத்தினார்கள்.
கப்பலும் இலக்கியமும்
வெண்ணிக்குயத்தியார், கரிகால் சோழனை விளித்து எழுதிய புறநானூற்றுப் பாடல் இதோ!
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டிவளிதொழில் ஆண்ட உரவோன் மருக!களி இயல் யானைக் கரிகால் வளவ!சென்று, அமர் கடந்தநின் ஆற்றல் தோன்றவென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,மிக்க புகழ் உலகம் எய்திப்,புறப்புண் நாணி, வடக்கி ருந்தோனே!!- வெண்ணிக் குயத்தியார் ( 66 / புறம் 400 )பாடல் விளக்கம்:கடலில் பெரிய கலங்களை காற்றின் சீற்றத்தினால் பாதிக்கப்படாமல் செலுத்தியவர்கள் சோழ மன்னர்கள். அவர் வழிவந்த, மிகப்பெரும் யானைப்படையை உடைய கரிகால் வளவனே!நீ, பகைவரின் இடம் தேடிச் சென்று, உன் ஆற்றல் உலகறிய அப்போரில் வெற்றி கண்டாய். ஆனால், புறப்புண் பட்டதற்கு நாணி, வெண்ணிப் போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயிர் நீத்து புகழ் உலகம் சென்ற சேரமான் பெருஞ்சேரலாதன், உன்னைக் காட்டிலும் நல்லன் அல்லவன்றொ?!!!
வெண்ணிக் குயத்தியார், சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவிஞர். குயவர் குலத்தைச் சேர்ந்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66-வது பாடலாக அமைகிறது. மற்ற பாடல்கள் கிடைக்கவில்லை. வெண்ணிப்பறந்தலையில் கரிகாலனிடம் தோற்று, புறப்புண் நாணி வடக்கிருந்த சேரனை 'நின்னினும் நல்லன்' என கரிகாலனிடம் உரிமையுடன் புகழ்ந்துரைத்ததால் புகழ்பெற்ற பாடல். வெண்ணிக் குயத்தியாரின் இயற்பெயர் வெண்ணி. வெண்ணி என்பது நந்தியாவட்டை பூவாகும். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு மேற்கே உள்ள ஓர் ஊர் வெண்ணி. இது தேவாரப் பாடல் பெற்ற தலம். கோயில்வெண்ணி என்றும், கோயிலுண்ணி என்றும் வழங்கப்படுகிறது.இவ்வூரிலுள்ள கரும்பேசுவரர் கோயிலிலுள்ள தலவிருட்சம் வெண்ணி. குயவர் குலத்தில் பிறந்தவராதலால் வெண்ணிக்குயத்தியார் என்று வழங்கப்பட்டார்.
************
Comments