கண்ணாமூச்சி - பாரம்பரிய விளையாட்டு 30 - Traditional Game 30
- John Britto Parisutham
- May 7
- 1 min read
சாட், பூட், திரி போட்டு ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் நீங்கள் தான் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் அம்மா தான் விளையாட்டை நடத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
உங்கள் அம்மா, உங்கள் கண்களை பொத்திக்கொண்டு கீழ்க்கண்ட பாடலைப் பாடுவார்.
‘ கண்ணாமூச்சி ரே…ரே…
காதடப்பா ரே….ரே…
நல்ல முட்டைய தின்னுட்டு
கெட்ட முட்டைய கொண்டு வா’
ஆனால் நாம் பாடலை கொஞ்சம் மாத்துவோம்.
‘கண்ணாமூச்சி ரே… ரே…
சுத்திமுத்தி பாரேன்.
நல்ல முட்டை தின்னுட்டு
நாலு முட்டை தாரேன்’
அப்படி உங்கள் அம்மா பாடும்போது, விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஓடி ஒளிந்துக்கொள்ளவேண்டும். பாடலைப் பாடி முடித்ததும், உங்கள் அம்மா, உங்கள் கண்களிலிருந்து தன் கைகளை எடுத்துவிடுவார். ஒவ்வொருத்தராகத் தேடிப்போய் நீங்கள் பிடிக்கவேண்டும். உங்கள் கண்களுக்குப்படாமல், வீரர்கள் உங்கள் அம்மாவைத் தொட்டுவிட்டால் அவர்களைப் பிடிக்க முடியாது. யாரை முதலில் நீங்கள் பார்த்து ‘உன்னை பார்த்துவிட்டேன்’ எனச் சொல்கிறீர்களோ, அவர் மறுபடி ‘பிடிப்பவர்’ ஆகிவிடுவார்.
அதை வேறு விதமாகவும் விளையாடலாம். ஒரு மரத்தில் நின்று கொண்டு நீங்கள் 1, 2, 3, 4 என்று 20 வரை சொல்லுங்கள். அதற்குள் உங்கள் நண்பர்கள் பக்கத்தில் போய் ஒளிந்துக் கொள்வார்கள். நீங்கள் கண்ணைத் திறந்து ஒளிந்துக்கொண்டிருக்கும் உங்கள் நண்பர்களைப் பார்த்தாலே அவர்கள் ஆட்டத்தை விட்டு வெளியேறவேண்டும். அதற்குள் உங்கள் நண்பர்கள் அந்த மரத்தைப் போய் தொட்டுவிட்டால் அவர்கள் வெளியேற வேண்டியதில்லை.
Comments