top of page

கவண் கல் செய்வோம் - பாரம்பரிய விளையாட்டு 7 - Traditional Game 7

Writer: John Britto ParisuthamJohn Britto Parisutham

7. கவண் கல் செய்வோம்

தேவையான பொருட்கள்: பழைய சைக்கிள் டியூப், தடிமனாக கவட்டைக் குச்சி, பழைய செருப்பிலிருந்து பிய்த்தெடுத்த தோல், சில சிறு கற்கள்

 

இதை கவண் கல், கவட்டை வார், கவட்டைக் கல் என்றும் கூறுவர். குறி பார்த்து அடிக்கக் கூடிய திறமை வளரும்.

 

செய்முறை: ஆங்கில எழுத்து Y போன்ற ஒரு கவட்டை குச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கட்டைவிரல் அளவு தடிமன் இருக்கலாம். கீழ்பகுதி 6லிருந்து 7 அங்குலம் இருக்கலாம். அதாவது உங்கள் கை பிடிக்கும் அளவு இருக்கலாம். மேலே செல்லும் இரண்டு பகுதிகளும் 2லிருந்து 3 அங்குலம் இருக்கலாம். பழைய சைக்கிள் டியூப்பை 2 அடி தூரத்திற்கு வெட்டிக்கொள்ளுங்கள். 2 அங்குலத்திற்கு ஓர் அங்குலத் தோலில் இரண்டு பக்கங்களிலும் சிறிது ஓட்டை போட்டுக்கொள்ளுங்கள். டயூப்பின் ஒரு பக்கத்தை ஒரு பக்க ஓட்டையில் விட்டு இழுத்து, மறு பக்க ஓட்டையில் விட்டு இழுத்துவிடுங்கள். தோல் டியூபின் மையப்பகுதியில் இருப்பது போல் அமைத்துக்கொள்ளுங்கள்.

 

இப்பொழுது டியூபின் ஒரு பக்கத்தை Y ன் மேற்புற ஒரு பக்கத்தில் கட்டுங்கள். மறுபக்கத்தை மறுபுறம் கட்டுங்கள். கட்டியபிறகு படத்தில் உள்ளது போல் அமைப்பாக இருக்கும். உங்கள் கவண் தயார்.

 

விளையாட்டு: தோல் பகுதியில் ஒரு கல்லை வையுங்கள். ஒரு கையால் கவணின் கீழ்ப்பகுதியைப் பிடித்துக்கொள்ளுங்கள். மற்றொரு கையால் கவணின் தோல்பகுதியில் வைத்த கல்லை உங்கள் பக்கம் இழுங்கள். எதையாவது குறிபார்த்து அடியுங்கள்.

 

சில வாழ்க்கைக் குறும்புகள்:

     சிலர் எதிரில் வரும் நபர்களைக் குறிப் பார்த்து கல் எறிவர். சிலர் அடுத்தவர் மண்பானையைப் பார்த்து அடித்ததாகவும், அதில் இருந்த மோர் கீழே ஊற்றியதாகவும் சொல்வர். சிலர் பனைமரத்தில் இருக்கும் பனங்கள் பானையை நோக்கி கவண் கல் எறிய, அது பட்டு, பானை உடைந்து கள் கீழே ஊற்ற, கீழிருந்தே திருட்டுத்தனமாக பனங்கள்ளை குடித்ததாகக் கூறுவர். அணில் அடிப்பார்கள்.

 

இலக்கியத்தில் கவண் கல் (203-210 மலைபடுகடாம்)

புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர்

உயர்நிலை இதணம் ஏறிக் கைபுடையூஉ

அகன்மலை யிறும்பில் துவன்றிய யானைப்

 

பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல்

இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக்

கருவிர லூகம் பார்ப்போ டிரிய

உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன

வரும்விசை தவிராது மரமறையாக் கழிமின்


 

இப்பாடலை இப்படி பிரித்துப் படிக்க வேண்டும்

புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்

உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ

அகல் மலை இறும்பில் துவன்றிய யானை . . . .[205]

பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல்

இரு வெதிர் ஈர் கழை தத்தி கல்லென

கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய

உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன

வரும் விசை தவிராது மரம் மறையா கழிமின் . . . .[203 - 210]

 

பொருளுரை:

விளைநிலங்களில் குறவர்கள் பரண் மீது ஏறி இருந்துக் கொண்டு விளைச்சலைத் தின்னவரும் யானைகளை ஓட்டக் கவணால் கல் வீசுவர். அதன் தாக்கத்துக்குப் பயந்து, கருமையான விரல்களை உடைய ஊகக் குரங்குகள் மூங்கிலின் மீடு தத்திப் பயந்து பாய்ந்தோடும். அந்த விசைக்கல் உங்கள் மீது பட்டால் கூற்றம் போல் உங்கள் உயிருக்கு உலை வைக்கலாம். எனவே அக் காலத்தில் மர மறைவில் செல்லுங்கள்.

 

சிலப்பதிகாரம் 15-14

மிளையும், கிடங்கும், வளை வில் பொறியும்,

கரு விரல் ஊகமும், கல் உமிழ் கவணும்,

பரிவுறு வெந் நெயும், பாகு அடு குழிசியும்,

காய் பொன் உலையும், கல் இடு கூடையும்,

தூண்டிலும், தொடக்கும், ஆண்டலை அடுப்பும்,

கவையும், கழுவும், புதையும், புழையும்,

ஐயவித் துலாமும், கை பெயர் ஊசியும்,

சென்று எறி சிரலும், பன்றியும், பணையும்,

எழுவும், சீப்பும், முழு விறல் கணையமும்,

கோலும், குந்தமும், வேலும், பிறவும்,

ஞாயிலும், சிறந்து, நாள் கொடி நுடங்கும்

வாயில் கழிந்து;

(சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் – அடைக்கலக் காதை)

 

பொருளுரை:

அக்காலத்து அரண்களைச் சுற்றி போர் வீரர்கள் மறைந்து நின்று எதிரியைத் தாக்க ஏதுவான மரங்கள் நிறைந்த காடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அவற்றிடைபே பதுங்கு குழிகளும் ஏற்படுத்தப்பட்டன. சந்தேகத்துக்கு இடமானவர்களைக் கண்டால் தானே வளைந்து அம்புகளை எய்யும் விற்களும் நிறுவப்பட்ன. இது இக்கால தானியங்கி ஏவகணைகனின் அமைப்பை ஒத்திருப்பதைக் காணலாம்.கருங்குரங்கின் கைபோல விரல்கள் விரிந்திருந்து எதிரி வந்ததும் தப்பமுடியாதவாறு பற்றிக் கொள்ளும் கருவிரல் ஊகம் என்ற பொறி எங்கும் நிறுவப்பட்டிருந்தது. கற்களைத் தூர வீசி எதிரிகளைத் தாக்கும் இயந்திரங்களும் அந்தக் கோட்டைக்குள் இருந்தன. எப்போதும் எதிரிகள் மீது கொட்டித் துன்புறுத்தக் கூடிய நெய்கள் பானைகளில் கொதித்த வண்ணம் இருந்தன. ஒரு புறத்தே செம்பை உருக்கிக் கொதித்தன்மையுடை செம்பு நீரும் அந்தக் கோட்டைக் குள்ளேயே இருந்தன. உலர்ந்த இரும்பு உலக்கைகளும் கற்கள் நிரப்பப் பட்ட கூடைகளும் தயாராக இருந்தன. கோட்டைக்குள்ளே பாதுகாப்பாக இருந்து கொண்டு புறத்தே எதிரியைப் பற்றியிழுக்கும் தூண்டில்களும் அந்தக் கோடடைக்குள் இருந்தன. கழுத்தை இறுக்கி எதிரிகளைக் கொல்லும் தொடக்கு என்ற ஆயதமும் எதிரியைக் காணும் போது தானாகப் பற்றிக் கொள்ளும் அடுப்புகளும் அங்கே இருந்தன. கோட்டையைச் சுற்றி ஓடும் அகழியில் இறங்கி மதிலைத் தொடுவாரைத் தள்ளி வீழ்த்தும் பொறிகளும் மதிலைத் தொட்டு ஏற நினைப்போரின் கைகளைப் பதம் பார்க்கும் ஊசிகளும் அம்புகளும் அங்கு இருந்தன. பகைவர் வரும் போது அவர்களைத் தேடிச் சென்று இனங்கண்டு தாக்கும் சிரல் என்ற ஆயதமும் அவர்களிடம் இருந்தது. கோட்டையை முற்றுகையிட்டு மதில் மேல் ஏறுவோரைக் கொம்புடைய காட்டுப் பன்றி போன்ற பொறிகள் ஓடிவந்து இடித்து வீழ்த்தின. இவற்றை விட வேல்கள் பல இடங்களில் வெகுவாகக் குவிக்கப்பட்டிருந்தன.


***************

Comments


JOBA Logo transperent_edited.png

Inspiring Natural Living

John Britto Academy

JOBA

Registered in Australia: ASIC under section 33(8) of BNR Act 2011
 

bottom of page