பல்லாங்குழி (பாண்டியாட்டம்) - பாரம்பரிய விளையாட்டு 24
- John Britto Parisutham
- Apr 10
- 1 min read
தேவைப்படும் பொருட்கள்: பல்லாங்குழி கட்டை, புளியாங்கொட்டைகள் அல்லது சோழிகள்
விளையாட்டிற்கு முன்: பல்லாங்குழி கட்டையில் ஒரு பக்கம் ஏழு குழிகள் இருக்கும். எதிர் பக்கம் ஏழு குழிகள் இருக்கும். ஆக மொத்தம் பதினான்கு குழிகளிலும் தலா ஐந்து காய்களைப் போடுங்கள். ஒரு பக்கம் நீங்கள் அமருங்கள். எதிர் பக்கம் உங்கள் அம்மா உட்காரட்டும்.
விளையாட்டு: முதலில் நீங்கள் ஆரம்பியுங்கள். உங்கள் பக்கத்தி்ல் உள்ள ஏழு குழிகளில் ஏதாவது ஒரு குழியிலிருந்து ஐந்து காய்களை எடுங்கள். ஒவ்வொரு குழியிலும் ஒரு காயைப் போடுங்கள். கடிகார திசைக்கு எதிர் திசையில் போடவேண்டும். ஐந்து காய்களை ஒவ்வொன்றாக போட்டதும் அடுத்த குழியில் எத்தனை காய்கள் இருக்கிறதோ, அவைகளை எடுத்து அதைப் போலவே போட வேண்டும்.
விதி என்னவென்றால், நீங்கள் காயைப் போட்டுவிட்டு கையில் ஒன்றுமில்லாது இருக்கும் போது, அடுத்த குழி காலியாக இருந்தால், அதற்கு அடுத்த குழியில் இருக்கும் காய்களை நீ்ங்கள் எடுத்துக்கொள்ளலாம். பிறகு, உங்கள் அம்மா ஆடத்துவங்குவார்.
இன்னொரு விதி, உங்கள் பக்கத்தில் உள்ள ஏழு குழிகளில் நான்கு காய்கள் சேர்ந்தால் அதை ‘முத்து’ என்று சொல்லி நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். (சிலர் அதை ‘பசு’ என்றும் அழைப்பர்)
அடுத்த விதி. எல்லா காய்களும் தீர்ந்த பிறகு முதல் ஆட்டம் முடியும். இப்பொழுது நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் காய்களை ஐந்து ஐந்து காய்களாக நிரப்ப வேண்டும். உங்கள் அம்மாவும் அவ்வாறே செய்வார். நீங்கள் அதிக காய்களை பெற்றிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதாவது, ஏழு குழிகளிலும் ஐந்து ஐந்து போட்டுவிட்டு மீதி உங்கள் கையில் இருக்கும். அப்படியானால் உங்கள் அம்மாவுக்கு போதுமான காய்கள் இருக்காது. அந்த வெற்று குழிகளில், குச்சி அல்லது பேப்பர் போன்ற ஒன்றை போட்டு ஆடலாம்.
உங்களுக்கோ அல்லது உங்கள் அம்மாவுக்கோ எல்லா குழிகளும் வெற்று குழிகளாக ஆகிவிட்டால், ஆட்டம் முடிந்துவிடும்.
Comments